நடிகை கவுதமிக்கு மிரட்டல் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
நடிகை கவுதமிக்கு மிரட்டல் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
ADDED : மே 15, 2025 02:22 AM

சென்னை:'வழக்கறிஞர்கள் என்ற பெயரில், எனக்கு மிரட்டல் விடும் நபர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, போலீசில் நடிகை கவுதமி புகார் அளித்துள்ளார்.
சென்னை, அக்கரை பகுதியில், நடிகை கவுதமி வசிக்கிறார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, 'ஆன்லைன்' வாயிலாக, அவர் அனுப்பியுள்ள புகார் மனு:
சென்னை, நீலாங்கரையில் எனக்கு சொந்தமான, 9.90 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, எனக்கு தெரிந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சாள், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, மைத்துனர் பாஸ்கர் மற்றும் அவர்களது கார் ஓட்டுநர் சதீஷ்குமார் ஆகியோர் அபகரித்தனர்.
அவர்கள் மீது, இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், அழகப்பன் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்களை கைது செய்தனர். அவர்கள் ஜாமினில் வெளியே வந்து விட்டனர்.
இந்நிலையில், அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர், எனக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணிகளை துவங்கி உள்ளனர்.
சட்ட விரோதமாக மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற்றுள்ளனர். இதனால், கட்டுமானப் பணி நடக்கும் இடத்திற்கு, சென்னை மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கறிஞர்கள் என்ற பெயரில், எனக்கு மர்ம நபர்கள், 'வாட்ஸாப்' வாயிலாக மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனக்கு எதிராக, நீலாங்கரை காவல் நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக, 'போஸ்டர்' ஒன்றை தயாரித்து, எனக்கு அனுப்பி உள்ளனர்.
இவர்களால் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.