சீமான் கட்சியை தடை செய்ய தேர்தல் கமிஷனில் புகார் மனு
சீமான் கட்சியை தடை செய்ய தேர்தல் கமிஷனில் புகார் மனு
ADDED : ஜன 31, 2025 08:12 PM
வரும் பிப்., 5ல், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு, தி.மு.க., நாம் தமிழர் உள்ளிட்ட 65 பேர் போட்டியிடுகின்றனர். அதில், தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் மட்டும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்காக, ஈரோட்டில் தீவிர பிரசாரத்தில் இருக்கிறார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். தன்னுடைய பேச்சில், ஈ.வெ.ரா., உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்து கடுமையான விமர்சனம் வைக்கிறார்.
இந்த நிலையில், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என, மத்திய தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க., ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் புகழேந்தி மனு அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருக்கும் சீமான், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்து மோசமான விமர்சனம் வைத்துப் பேசி, பிரசாரம் செய்து வருகிறார். ஜாதி, மதம், இனம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதால், கலவரம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அமைதியாக தேர்தல் நடத்த முயலும் தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளுக்கு விரோதமாக அவர் பேச்சு அமைந்துள்ளது.
அதனால் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். கட்சியையும் தடை செய்ய வேண்டும். மோசமான வகையில் பிரசாரம் செய்யும் சீமான் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறுப்பிடப்பட்டுள்ளது.
-நமது நிருபர்-