ADDED : அக் 06, 2024 01:29 AM
சென்னை: தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வேல்சங்கர், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் ஆகியோர், முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
தமிழகம் முழுதும், சில மாதங்களுக்கு முன் சொத்து வரி உயர்த்தப்பட்டது.
அப்போது, 20 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டதால், வணிகர்கள், தயாரிப்பாளர்கள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுவாக, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்து வரி உயர்த்தப்பட்டு வந்தது. தற்போது, 8 சதவீதம் உயர்த்த பரிசீலிப்பதாக அறிவிப்பு செய்தது அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை, உடனே நிறுத்தி வைக்க வேண்டும்.
சொத்து வரி இரண்டாம் தவணை செலுத்துவதற்கான அவகாசம், 2025 மார்ச் வரை உள்ள போதும், பல பகுதிகளில் வற்புறுத்தி வசூலிக்கப்படுகிறது.
எனவே, மார்ச்சுக்குள் செலுத்த வேண்டிய சொத்து வரியை வற்புறுத்தி வசூலிக்க வேண்டாம் என, உள்ளாட்சி துறைக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.