அரசு பல் மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரத்தை காப்பாற்ற குறுக்கு வழி டாக்டர்கள் கட்டாய பணியிட மாற்றம்
அரசு பல் மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரத்தை காப்பாற்ற குறுக்கு வழி டாக்டர்கள் கட்டாய பணியிட மாற்றம்
ADDED : ஜூலை 30, 2025 11:02 PM
சென்னை:'அரசு மருத்துவமனை களில் பணியாற்றும் பல் டாக்டர்களை, கடலுார், புதுக்கோட்டை அரசு பல் மருத்துவ கல்லுாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்வதை கைவிட வேண்டும்' என, அரசு டாக்டர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
சென்னை, கடலுார், புதுக்கோட்டையில் அரசு பல் மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதில், கடலுார், புதுக்கோட்டையில் உள்ள அரசு பல் மருத்துவ கல்லுாரிகளில், போதிய டாக்டர்கள் இல்லை.
அப்பணியிடங்களை நிரப்பவில்லை என்றால், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என, இந்திய பல் மருத்துவ கவுன்சில், 'நோட்டீஸ்' அனுப்பியது.
பல் டாக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், மற்றும் மருத்துவ ஊரக நல பணிகள் இயக்ககம் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து, 27 டாக்டர்கள், கடலுார், புதுக்கோட்டை பல் மருத்துவ கல்லுாரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு, அரசு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, அரசு டாக்டர்கள் கூறியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளாக பல் டாக்டர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அதேபோல், 10 ஆண்டுகளாக அரசு பணிக்கு பல் டாக்டர்கள் தேர்வு செய்யப் படவில்லை.
அதனால் தான் தற்போது பல் மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரத்துக்கு தேவையான பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் இல்லை.
பல் மருத்துவ கவுன்சில் எச்சரிக்கையை தொடர்ந்து, அவசர அவசரமாக மற்ற அரசு மருத்துவமனைகளில் உள்ள பல் டாக்டர்களை, அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு கட்டாயமாக அனுப்பி வைக்கின்றனர்.
இதனால், அவர்கள் ஏற்கனவே பணியாற்றி வந்த அரசு மருத்துவ மனைகளில், பல் டாக்டர் இல்லாத நிலை ஏற்படுகிறது. பல் டாக்டர்களுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான, இந்நடவடிக்கையை அரசு உடனே கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.