தினசரி விற்பனை 94 லட்சம் மது பாட்டில் கணினிமயத்தால் கிடைக்குது துல்லிய தகவல்
தினசரி விற்பனை 94 லட்சம் மது பாட்டில் கணினிமயத்தால் கிடைக்குது துல்லிய தகவல்
ADDED : ஆக 27, 2025 12:22 AM
சென்னை:தமிழகத்தில் உள்ள, 'டாஸ்மாக்' கடைகளில் தினமும் சராசரியாக, 94 லட்சம் மதுபான பாட்டில்கள் விற்கப்படும் விபரம், கணினிமய திட்டத்தின் வாயிலாக துல்லியமாக தெரியவந்துள்ளது.
தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், 4,787 சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது.
முன்னுரிமை
அவற்றில் தினசரி விற்பனை விபரங்களை, ஊழியர்கள் தங்கள் மொபைல் போன் வாயிலாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர்.
இதன் வாயிலாக தினமும் சராசரியாக, 7.20 லட்சம் பாட்டில் பீர் வகைகள், 71 லட்சம் பாட்டில் மது வகைகள் விற்பனையாவது தெரியவந்தது.
கடை ஊழியர்கள், விற்பனையை குறைத்து காட்டுவது, குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகளுக்கு முன்னுரிமை அளித்து விற்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். மேலும், மதுபான ஆலைகளில் இருந்து மது வகைகளை நேரடியாக அனுப்புவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, மதுபான ஆலையில் கொள்முதல் செய்வது முதல், வாடிக்கையாளர்களுக்கு விற்பது வரை அனைத்து செயல்பாடுகளையும் கணினிமயமாக்கும் திட்டத்தை, டாஸ்மாக் நிறுவனம், 293 கோடி ரூபாயில் சமீபத்தில் செயல்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மதுபான ஆலைகளில், மது பாட்டில்கள் உற்பத்தி செய்த பின், ஒவ்வொன்றும் தனித்தனியே, 'ஸ்கேன்' செய்யப்பட்டு, பெட்டியில் வைக்கப்படுகிறது.
பிரின்டர் சாதனம்
அவை, லாரிகளில் ஏற்றப்பட்டு, கிடங்குகளுக்கு அனுப்பப்படும் போது, ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள, 'கியூஆர்' குறியீடு 'ஸ்கேன்' செய்யப்பட்டு, கிடங்குகளில் இறக்கி வைக்கப்படுகிறது. அங்கிருந்து மதுக்கடைகளுக்கு அனுப்பும் போதும், ஸ்கேன் செய்யப்படுகிறது.
பின், மது கடைகளில் விற்கும் போதும், ஸ்கேன் செய்யப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு மதுக்கடைக்கும், மூன்று - நான்கு 'ஸ்கேனர்' கருவிகளும், ஒரு பிரின்டர் சாதனமும் வழங்கப்பட்டு உள்ளது.
இதனால், மதுபான ஆலைகளில் இருந்து அனுப்பப்பட்ட மது வகைகள்; அவை எப்போது அனுப்பப்பட்டன; கடைகளில் உள்ள இருப்பு உள்ளிட்ட விபரங்களை, டாஸ்மாக் அதிகாரிகள் கணினி வாயிலாக துல்லியமாக அறிய முடியும்.
அனைத்து மது கடைகளுக்கும் ஸ்கேனர் கருவிகள் வழங்கும் பணி, ஜூனில் முடிவடைந்து, கடந்த மாதம் முதல் தான் முழுவீச்சில் இது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதன்படி, தினமும் சராசரியாக, 93 முதல் 94 லட்சம் மதுபான பாட்டில்கள் விற்பனையாகின்றன.
அதில் பீர் வகைகள், 12 லட்சமாகவும், மீதி மது வகைகளாகவும் உள்ளன.