பேரூராட்சி கூட்டத்தில் விஜய்க்கு எதிராக தி.மு.க., கண்டனமா?
பேரூராட்சி கூட்டத்தில் விஜய்க்கு எதிராக தி.மு.க., கண்டனமா?
ADDED : நவ 01, 2024 04:26 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மம்சாபுரம் பேரூராட்சியில் நடந்த மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர் தங்க மாங்கனி தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் விஜய்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என செயல் அலுவலர் தெரிவித்தார்.
இப்பேரூராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த சுஜிதா மேரி உள்ளார். அவரது கணவர் தங்கமாங்கனி 10வது வார்டு கவுன்சிலராக உள்ளார். நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு மாதாந்திர கவுன்சில் கூட்டம் தலைவர் சுஜிதாமேரி தலைமையில் நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிந்து தலைவர், செயல் அலுவலர் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர்.
பின் கூட்ட அரங்கில் இருந்த கவுன்சிலர் தங்க மாங்கனி எழுந்து விக்கிரவாண்டி மாநாட்டில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஈ.வே.ராமசாமி, திராவிட மாடல் ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறு பேசி உள்ளார். அதனை பேரூராட்சி, தி.மு.க., சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
செயல் அலுவலர் ரமேஷ் கூறுகையில், ''கவுன்சில் அஜென்டாவில் 3 பொருள் குறித்த தீர்மானம் மட்டும் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்தவுடன் வெளியில் வந்து விட்டோம். கூட்ட அரங்கில் இருந்த தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தனர். விஜய்க்கு எதிராக கவுன்சில் கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை,'' என்றார்.