பாதயாத்திரை முடிவில் மாநாடு பிரதமர் வருகை ஏன்: அண்ணாமலை
பாதயாத்திரை முடிவில் மாநாடு பிரதமர் வருகை ஏன்: அண்ணாமலை
ADDED : பிப் 24, 2024 02:23 AM
பல்லடம்:திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த மாதப்பூரில், வரும் 27ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பா.ஜ., பொதுக்கூட்டம் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை நேற்று நேரில் ஆய்வு செய்த பின், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா மற்றும் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஆகியன பிரமாண்டமான முறையில் நடைபெற உள்ளன.
தமிழகத்தின் அரசியல் மாற்றங்களில் மிக முக்கியமானதாக, 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிறைவு விழா அமைய உள்ளது. 1947க்கு பின் எத்தனையோ அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இந்த மாநாடால் ஏற்படும் மாற்றம், மிக முக்கியமானதாக கருதப்படும்.
மாநாட்டு நிறைவு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை தருவது, ஒட்டுமொத்த யாத்திரைக்கும் முத்தாய்ப்பாக அமைகிறது.
யாத்திரையை பல்லடத்தில் முடிப்பது என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. யாத்திரையை எங்கு முடிக்கிறோமோ, அங்கு தான் பிரதமரை அழைத்து வர முடியும் என்பதால் பல்லடத்துக்கு பிரதமர் வருகிறார். பல்லடத்தில் நடைபெற உள்ள இந்த மாநாடு, கட்டாயம் சரித்திரத்தில் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.