ஜூலை 10ல் மதுரையில் மாநாடு: ஆடு மாடுகளுடன் பேசுகிறார் சீமான்
ஜூலை 10ல் மதுரையில் மாநாடு: ஆடு மாடுகளுடன் பேசுகிறார் சீமான்
ADDED : ஜூன் 14, 2025 12:11 AM

ஆடு, மாடுகளுடன் பேசி, அவற்றின் எதிர்பார்ப்பை, அரசிடம் வலியுறுத்த, அடுத்த மாதம் 10ம் தேதி, மதுரையில் மாநாடு நடத்த, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முடிவெடுத்துள்ளார்.
இது குறித்து, அவர் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:
கால்நடை மேய்ச்சல், மனித குலத்தின் பாரம்பரியமான தொழிலாக விளங்கி வருகிறது. வனப்பகுதியில் கால் நடை மேய்ச்சலே, பழங்குடியினருக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர், மாடு, ஆடு, எருமை, கோழிகளை வளர்த்து வருகின்றனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக அவர்களுக்கு வருவாய் ஆதாரமாக இருப்பது கால்நடை வளர்ப்பு.
அவர்கள் தங்களின் கால்நடைகளை, வனப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் மேய்க்க, வனத்துறை தடை விதிக்கிறது. நாடு உங்களுடையதாக இருக்கலாம்; ஆனால், காடு எங்களுடையது. எனவே, காட்டில் கால்நடைகள் மேய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும். ஆடு, மாடு வளர்ப்பை மீட்பது, நாம் தமிழர் கட்சியின் பிரதானக் கொள்கை.
மனிதர்கள் மட்டும் பூமியில் வாழ்வதற்கு நான் போராடவில்லை. கால்நடைகள், பறவைகள், தாவரங்கள் போன்ற உயிரினங்களும் வாழ வேண்டும்.
எல்லா உயிரினங்களுக்கும் வாழ்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். தமிழகம், இயற்கை வளம் நிறைந்த மாநிலமாக உருவாக வேண்டும்.
கால்நடைகள் பெருகினால்தான், வளர்ப்பவர்கள் வாழ முடியும். ஆட்டுக்கறி, மாட்டுக்கறியை ஏற்றுமதி செய்கிறோம்; நாம் சமைத்து ருசியாக சாப்பிடுகிறோம்.
ஆனால் அவை சாப்பிட, புல், பூண்டுகளை கொடுக்க மாட்டோம் என்பதும், இயற்கையாக விளைந்த புல்லை திண்பதற்கு தடை போடுவதும், என்ன நியாயம்.
அவற்றுக்கு வயிறு இல்லையா. அவையும் ஜீவராசிதானே. அதை ஏன் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை. என் போராட்டத்தின் வாயிலாக புரிய வைப்பேன்.
நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால், பள்ளிக்கூடங்களில் படிக்கிற பிள்ளைகளுக்கு, இலவசமாக பால், முட்டை, தயிர், மோர் போன்ற ஊட்டச்சத்து பொருட்களை வழங்கி படிக்க வைப்போம். ஆடு, மாடு மேய்க்கும் பணியை, அரசு பணிகளாக மாற்றுவேன். ஆடு, மாடு மேய்ப்பர்களாக கிருஷ்ணர், நபிகள் நாயகம், இயேசு கிறிஸ்து இருந்துள்ளனர். இந்த அரசு ஏன் மேய்ப்பராக இல்லை.
விழுப்புரம், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பத்துார், கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் அதிகமாக உள்ளனர். அப்பகுதியில் உள்ள மலைக் காடுகளில், ஆடு, மாடுகள் மேய, அரசு தடை விதிக்கிறது.
இதை கண்டித்து நானே ஆடு, மாடுகளை மேய்க்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறேன். அடுத்த மாதம் 10ம் தேதி, மதுரையில் நடக்க உள்ள மாநாட்டில், ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளை திரட்டி அவற்றிடம் பேசுவேன்.
அவை என்னிடம் சொல்கிற கோரிக்கைகளை, அரசுக்கு தெரிவிப்பேன். ஆடு, மாடுகள் பேசும் மொழி எனக்குப் புரியும். இவ்வாறு சீமான் கூறினார்.
- நமது நிருபர் -