UPDATED : செப் 10, 2024 11:34 PM
ADDED : செப் 10, 2024 11:28 PM

சென்னை : மதுக்கடைகளை அரசே நடத்தி வரும் நிலையில், ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன், அக்., 2ல் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக அறிவித்துள்ளார்; அதோடு நில்லாமல், மாநாட்டுக்கு வருமாறு, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
திருமாவளவன் அளித்த பேட்டி:
காந்தி பிறந்த நாளில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிர் அணி சார்பில், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு, கள்ளக்குறிச்சி அல்லது உளுந்துார்பேட்டை அருகே நடக்க உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி, 69 பேர் இறந்தனர். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது, 'அரசு எங்களுக்கு இழப்பீடு தருவது முக்கியம் அல்ல. அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும். சாராயத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை' என்றனர்.
உறுதிமொழி
எனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநாடு நடத்த உள்ளோம். மதுவிலக்கு கொள்கையை தன் உயிர்மூச்சாகக் கொண்டவர் காந்தி.
அவர் பிறந்த நாளில், மகளிரை திரட்டி மாநாடு நடத்த உள்ளோம். அதில் முதன்மையான கோரிக்கை, தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதே.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவதாக உறுதிமொழி அளித்திருந்தது.
அனைத்து கட்சிகளும் மதுவிலக்கை வலியுறுத்தும்போது, மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்?
நல்ல சாராயத்தால், கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும் என்ற விவாதம் ஏற்கத்தக்கதல்ல. சாராயம் என்றாலே கேடுதான். தேசிய அளவில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான கொள்கையை வரையறுத்து, அதன் அடிப்படையில் சட்டம் இயற்ற வேண்டும்.
அனைவரையும் குடிநோயாளியாக மாற்றிவிட்டு, அவர்களுக்கு நலத்திட்டங்களை அறிவிப்பதில், எந்த பயனும் இல்லை.
மதுவிலக்கை தேசிய கொள்கையாக, மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பைத் தடுக்க, சிறப்பு நிதி வழங்க வேண்டும். தமிழக அரசு மதுக்கடைகளை முழுமையாக மூட, கால அட்டவணையை அறிவிக்க வேண்டும்.
போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க, உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநாட்டில் வலியுறுத்த உள்ளோம்.
கள்ளும் கூடாது
பீஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டபின், பெண்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது. எனவே, தமிழக அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கள் உட்பட எந்த போதைப்பொருளும் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு.
மது ஒழிப்பு மாநாட்டில், அ.தி.மு.க., பங்கேற்கலாம்; எல்லா கட்சிகளும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும், ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது.
இதை தேர்தலோடு சம்பந்தப்படுத்த வேண்டாம். எங்களை பொறுத்தவரை, தேர்தல் அரசியல் நிலைப்பாடு வேறு. மக்கள் பிரச்னைக்காக, மதவாத, ஜாதியவாத சக்திகள் தவிர, எந்த சக்திகளோடும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.