சிறப்பு வாக்காளர் திருத்த பணி; தேர்தல் கமிஷன் கணக்கில் குழப்பம்
சிறப்பு வாக்காளர் திருத்த பணி; தேர்தல் கமிஷன் கணக்கில் குழப்பம்
ADDED : டிச 05, 2025 06:30 AM

சென்னை: எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக, தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள தகவல், குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது.
முதல் கட்டமாக வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணியை இன்றுடன் முடிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருந்தது.
அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று, வரும் 11ம் தேதி வரை, கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். நேற்று வரை 6.39 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட 6.23 கோடி படிவங்கள் திரும்ப பெறப்பட்டு, 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதன்படி, வினியோகம் செய்யப்பட்ட படிவங்களில் இருந்து, இன்னும் 15.7 லட்சம் படிவங்களை திரும்பப் பெற வேண்டிஉள்ளது.
ஆனால், வாக்காளர்களில் 25.7 லட்சம் பேர் இறந்துள்ளனர்; 8.95 லட்சம் பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை; 39.2 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் மாறியுள்ளனர் என, தகவல் வெளியாகி உள்ளது.
அதேநேரம், மொத்தமுள்ள வாக்காளர்களில், 1.83 லட்சம் பேருக்கு மட்டுமே, கணக்கெடுப்பு படிவத்தை வழங்கவில்லை என, தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அப்படியானால், இறந்தவர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்கள் ஆகியோருக்கு, விண்ணப்பப் படிவம் எப்படி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. தேர்தல் கமிஷன் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

