பி.இ.ஓ.,க்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்; நிர்வாக காரணம் என்ற பெயரில் முன்கூட்டியே மாறுதலா
பி.இ.ஓ.,க்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் குழப்பம்; நிர்வாக காரணம் என்ற பெயரில் முன்கூட்டியே மாறுதலா
ADDED : மே 16, 2025 06:28 AM

மதுரை : தொடக்க கல்வித்துறையில் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான (பி.இ.ஓ.,க்கள்) பொதுமாறுதல் கலந்தாய்வு இன்று (மே 16) நடக்கவுள்ள நிலையில், வழக்கத்திற்கு மாறாக கல்வி மாவட்டத்திற்குள் மாறுதல் நடைமுறை பின்பற்றப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சீனியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மாநில அளவில் 851 பி.இ.ஓ.,க்கள் உள்ளனர். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுமாறுதல் கலந்தாய்வு நடக்கும். 2021-2022 க்கு பின் இந்தாண்டு அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவில், முதலில் மாவட்டத்திற்குள்ளும், பின் வெளி மாவட்டத்திற்குமான மாறுதல் கலந்தாய்வு நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான சங்கம் சார்பில் நேற்று அனைத்து பி.இ.ஓ.,க்களுக்கும் ஒரு அவசர தகவல் அனுப்பப்பட்டது. அதில் 'இந்தாண்டு கலந்தாய்வு முதலில் கல்வி மாவட்டம் அளவிலும், அடுத்து மாவட்டம், மாநிலம் அளவில் நடத்தப்படும். நடுநிலை பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றிய ஒன்றியம், தற்போது பணியாற்றும் ஒன்றியம், அதற்கு முன் பணியாற்றிய ஒன்றியத்திற்கு மாறுதல் கேட்க முடியாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி கலந்தாய்வு உத்தரவில் மாவட்ட அளவில் எனவும், சங்கம் சார்பில் கல்வி மாவட்ட அளவிலும் நடத்தப்படும் என்ற தகவல்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பி.இ.ஓ.,க்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பி.இ.ஓ.,க்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட அளவிலும், அடுத்து மாவட்டம் விட்டு மாவட்டம் என்ற நடைமுறை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இம்முறை முதல்முறையாக கல்விமாவட்டத்திற்குள்ளான மாறுதல் முறை நடக்கவுள்ளது. இதனால் சீனியர்கள் பலருக்கு பாதிப்பு ஏற்படும் என்றனர்.
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் நரேஷ் கூறியதாவது: பி.இ.ஓ.,க்கள் என்பது அதிகாரிகள். பலர் பல ஆண்டுகளாக ஒரே கல்வி ஒன்றியத்திற்குள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், நிர்வாக காரணத்திற்காக கல்வி மாவட்டம் அளவில் மாறுதல் கலந்தாய்வு நடத்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.