மாவட்ட வாரியாக த.வெ.க., 'வார் ரூம்' கட்டுப்பாட்டு அறை அமைப்பதில் குழப்பம்
மாவட்ட வாரியாக த.வெ.க., 'வார் ரூம்' கட்டுப்பாட்டு அறை அமைப்பதில் குழப்பம்
ADDED : ஆக 03, 2025 03:31 AM
சென்னை : சட்டசபை தேர்தலுக்காக மாவட்ட வாரியாக, 'வார் ரூம்' அமைக்க, த.வெ.க., திட்டமிட்டுள்ளது. ஆனால், அதற்கான தலைமை கட்டுப்பாட்டு அறை அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு எதிராக தேர்தல் வியூகங்களை வகுக்க, விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில், மாவட்ட வாரியாக, 'வார் ரூம்' எனப்படும் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதன் வாயிலாக, தலைமை நிர்வாகிகளிடம் இருந்து, 24 மணி நேரமும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், பூத் ஏஜன்டுகளுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்.
இதுபோல, தொண்டர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், மாவட்ட 'வார் ரூம்' வாயிலாக, தலைமைக்கு தெரிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டத்திற்கு, 10 பேர் வீதம் வார் ரூமில் நியமிக்கவும், வார் ரூம் அமைக்கும் செலவுகளை, கட்சித் தலைமை ஏற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட வார் ரூம்களில் இருந்து வரும் தகவல்களை பெறுவதற்கான, தலைமை வார் ரூமை எங்கு அமைப்பது என்பதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
மாவட்ட வாரியாக வார் ரூம் அமைக்க வேண்டும் என, கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, தெரிவித்த யோசனைக்கு, விஜய் ஒப்புதல் அளித்து விட்டார்.
ஆனால், தலைமை வார் ரூம், போயஸ் கார்டனில் உள்ள தன் அலுவலகத்தில் அமைத்து, தன் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என, ஆதவ் அர்ஜுனா விரும்புகிறார். ஆனால், பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தான், வார் ரூம் அமைக்க வேண்டும் என, பொதுச்செயலர் ஆனந்த் கூறுகிறார்.
ஏற்கனவே, 'எல்லாவற்றையும் பனையூரை சுற்றியே செய்வதால், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு கட்சி ஆளாகிறது' என, ஆதவ் அர்ஜுனா சுட்டிக் காட்டியுள்ளார். இதனால், தலைமை வார் ரூம் அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. போட்டியில், யார் கை ஓங்கும் என்பது விரைவில் தெரியும்.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.