ADDED : நவ 06, 2025 07:27 AM

சென்னை: தி.மு.க., சட்டத்துறை செயலர் என்.ஆர்.இளங்கோ அளித்த பேட்டி:
தமிழகத்தில் துவங்கிய சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கள ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. அலுவலர்கள் எந்த இடத்திற்கும் வந்து, கணக்கீடு படிவங்களை தரவில்லை.
அவர்களிடம் கேட்டால், படிவங்கள் வந்து சேரவில்லை என்கின்றனர். தேர்தல் கமிஷன் நிர்ணயித்த 30 நாளில் ஒரு நாள், படிவங்கள் வழ ங்க முடியாமலேயே போய்விட்டது. படிவம் கொடுத்த மறுநாளே, பூர்த்தி செய்து தரவேண்டும் என கூறுவது நியாயமல்ல.
வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ள காலத்தில், திருத்தப் பணிகள் மேற்கொள்வது சரியல்ல. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு தடை கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பீஹாரில் எந்த விசாரணையும் இல்லாமல், 65 லட்சம் பேரை நீக்கி, குளறுபடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் பல லட்சம் ஓட்டுகள் நீக்கப்படும் அபாயமும், ஒரு மாதத்துக்குள் கணக்கீடு படிவத்தை நிரப்பி தராதவர்கள், வாக்காளர்ளாக இருக்க முடியாத நிலையும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

