ADDED : ஆக 17, 2011 12:45 AM
சென்னை : ''வேளாண் துறையை ஊக்குவிக்கும் வகையில், வேளாண்துறை கொள்கை விளக்க குறிப்பு இருக்கிறது,'' என்று, காங்., உறுப்பினர் பிரின்ஸ் பாராட்டு தெரிவித்தார்.
சட்டசபையில், வேளாண்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில், பிரின்ஸ் பேசியதாவது: வேளாண் துறையை ஊக்குவிக்கும் வகையில், இந்த துறையின் கொள்கை விளக்க குறிப்பு இருக்கிறது.
கன்னியாகுமரியில், விவசாயம் மிகவும் நலிந்துவிட்டது. விவசாயத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரியில், வேளாண் கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரிப்பகுதியில், நேந்திரம் வாழைப்பழம் அதிகளவில் விளைகிறது. பள்ளி மாணவர்களுக்கு, சத்துணவுடன் வாரத்திற்கு இரண்டு நேந்திரம் வாழைப்பழம் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்தால், நேந்திரம் பயிரிடும் விவசாயிகள் பலனடைவர். இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் குணசேகரன்: தமிழகத்தில் நடைபெறும் மொத்த சாகுபடியில், 50 சதவீதம் மானாவாரி சாகுபடியாக உள்ளது. மானாவாரி சாகுபடிக்கான உற்பத்திச் செலவை அரசே ஏற்றால், பயிறு வகை சாகுபடிகளை அதிகம் செய்ய முடியும். இதனால், பயிறு வகைகள் இறக்குமதி செய்வது தவிர்க்கப்படும். வேளாண்துறை அமைச்சர் செங்கோட்டையன்: கனடா மற்றும் கர்நாடகாவில் இருந்து, பயிறு வகைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதியை நிறுத்தும் வகையில், பயிறு வகை சாகுபடியை இந்த ஆண்டு இரு மடங்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.