ADDED : ஜன 10, 2025 02:57 AM
சென்னை:''ஹிந்து சமய அறநிலையத் துறையை, 'தமிழ்நாடு அறநிலையத் துறை' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்தார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:
'ஹிந்து' என்ற வார்த்தை, எந்த அகராதியிலும் இல்லை. எந்த இலக்கியத்திலும் இல்லை. பிரிட்டிஷார் அவர்களின் வசதிக்காக, சிந்து என்பதை, ஹிந்து என மாற்றி இருக்கின்றனர்.
எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறையை, தமிழ்நாடு அறநிலையத் துறை அல்லது திருக்கோவில் அறநிலையத் துறை என மாற்ற வேண்டும்.
காலம் மாறிக் கொண்டிருக்கிறது. வரலாறு மாறிக் கொண்டிருக்கிறது.
இதையும் மாற்ற வேண்டும். ஹிந்து என்ற பெயரை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர்.
எனவே, அந்த பெயரை மாற்ற வேண்டும். பட்டியல் இனத்தவர்களை தி.மு.க., அரசு தொழில் முனைவோராக்கி உள்ளது. அதனால் பட்டியல் இனத்தவர்களிடம், மற்ற சமூகத்தினர் வேலை செய்யும் நிலை உருவாகி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

