மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முழுமையான நம்பிக்கை உள்ளது
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முழுமையான நம்பிக்கை உள்ளது
UPDATED : ஜன 01, 2024 07:33 AM
ADDED : ஜன 01, 2024 06:33 AM

மானாமதுரை : ''மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முழுமையான நம்பிக்கை உள்ளது. அதை தொடர்ந்து பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை,'' என, சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
மானாமதுரை நகர் காங்.,அலுவலகத்தில் அவர் கூறியதாவது: எனக்கு தமிழக காங்., தலைவர் பதவி கிடைப்பது குறித்து அகில இந்திய தலைவர் கார்கே முடிவு செய்ய வேண்டும். தற்போது எங்கள் நோக்கம் வரும் லோக்சபா தேர்தலை மட்டுமே நோக்கியுள்ளது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து கட்சியில் சிலர் மாறுபட்ட கருத்துக்களை கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் ஹிந்தி கற்க வேண்டும் என்று கூறியது தவறு. தி.மு.க.,வை சேர்ந்த எம்.பி., பாலு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும் என்று கூறியதை வரவேற்கிறேன். ஹிந்தி தெரியாதவர்கள் இந்தியாவில் அதிகம் பேர் இருக்கின்றனர். அதில் நானும் ஒருவன்.
தென் மாவட்ட வெள்ளத்தின் போது முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு இண்டியா கூட்டணி குறித்து பேச சென்றது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது. வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் முதல்வர் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சர் உதயநிதி உங்க அப்பன் வீட்டு பணமா என எதுகை, மோனையுடன் பேசியது கொச்சையான வார்த்தை கிடையாது.
மத்திய அரசிற்கு நாம் கட்டும் வரிப்பணத்தில் மத்திய அரசு நமக்கு ஈடான நிதியை தருகிறதா என கவனிக்க வேண்டும். வட மாநிலங்களுக்கு அவர்கள் கொடுக்கின்ற வரியை விட கூடுதலாக நிதி கொடுக்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கேற்ப தென் மாநிலங்களுக்கு குறைவான நிதியை தருகின்றனர். அதைத்தான் உதயநிதி பேசியுள்ளார். தமிழகத்தில் தி.மு.க., காங்., கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்றார்.