த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்ததால் காங்கிரஸ் நிர்வாகி விலகல்
த.வெ.க.,வுக்கு ஆதரவு அளித்ததால் காங்கிரஸ் நிர்வாகி விலகல்
ADDED : மே 10, 2026 12:24 AM

துாத்துக்குடி: தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் தலைமையை கண்டித்து, அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
துாத்துக்குடி சின்னமணி நகரைச் சேர்ந்தவர் சந்திரபோஸ். 61 வயதான இவர், மாநகராட்சியின் 34வது வார்டு கவுன்சிலர்; மாநகராட்சி காங்., கொறடாவாகவும், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்தார். இந்நிலையில், சந்திரபோஸ் தன் கட்சி பதவியையும், மாநகராட்சி கொறடா பதவியையும் ராஜினாமா செய்துவிட்டதாக நேற்று அறிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
காங்கிரசில் 1988 முதல் உறுப்பினராகவும், ஐந்து முறை கவுன்சிலராகவும் இருந்தேன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து வெற்றிக்காக உழைத்தோம். பிரசாரத்தில் ஈடுபட்ட லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரசின் வெற்றிக்கு முயற்சி செய்யவில்லை.
தேர்தலில் வென்ற ஐந்து எம்.எல்.ஏ.,க்களும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை, யாரையும் கலந்து ஆலோசிக்காமலும், பொதுக்குழுவை கூட்டி கருத்தை கேட்காமலும், காங்., தலைமை எடுத்தது கண்டிக்கத்தக்கது. இது, எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதால், காங்., கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டேன்.
இவ்வாறு கூறினார்.
