பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்: வெளுத்து வாங்கினார் திமுக எம்எல்ஏ
பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்: வெளுத்து வாங்கினார் திமுக எம்எல்ஏ
UPDATED : ஜன 27, 2026 06:47 AM
ADDED : ஜன 26, 2026 07:12 PM

மதுரை: ''காங்கிரஸ் கட்சிக்கு வார்டில் பூத் கமிட்டி போடக்கூட ஆளில்லை,'' என்று மதுரை திமுக எம்எல்ஏ தளபதி காட்டமாக விமர்சித்தார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், திமுக வடக்கு எம்எல்ஏ கோ. தளபதி பேசியதாவது: காங்கிரஸ் நண்பர்கள் ஒரு சில பேர் இருக்கிறார்கள். மாணிக்கம் தாகூர், ஜோதிமணி இருக்கிறார்கள். அவர்கள் எம்பி ஆகிவிட்டார்கள். இனி வருபவர்கள் எம்எல்ஏ ஆனா என்ன? ஆகவில்லை என்றால் எனச் சொல்லி, அதில் பங்கு வேண்டும்? இதில் பங்கு வேண்டும் என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் தலைமை புரிந்து, அடுத்து இவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது. நம்ம கொடுக்க விடக்கூடாது.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால், நம்ம உணர்வோடு, நம்ம இல்லை என்றால் இண்டியா கூட்டணியே கிடையாது. டில்லியில் கூட்டணி நிற்பதற்கு காரணம், ஒன்று ஸ்டாலின், இரண்டு மம்தா பானர்ஜி, மூன்று அகிலேஷ் யாதவ். இந்த மூன்று பேர் தான் முதன்மையாக இருந்து இண்டியா கூட்டணியை காப்பாற்றி கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த காங்கிரசுக்கு, சொன்னா தப்பாக போய்விடும். மூன்றாயிரம், நான்காயிரம் ஓட்டு மட்டும்தான் இருக்கிறது. ஆள் கிடையாது. வார்டில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி. அது அந்த அளவுக்கு இன்றைக்கு பேசுகிறார்கள் என்றால் மனதுக்கு வேதனையாக இருக்கிறது.
பராசக்தி என்று இப்பொழுது ஒரு படம் வந்து இருக்கிறது. பார்த்து இருப்பீர்கள். அதில் அப்படியே காண்பித்து இருக்கிறார்கள். மேல வாசி வீதி என்று போர்டு போட்டு இருப்பார்கள். மதுரை பதிவு பதிவு எண் கொண்ட கார் எண் Mdu என்றுதான் போட்டு இருக்கும். பராசக்தி படத்தில் ஹிந்தி எதிர்ப்பு பற்றி தான் காண்பித்து இருக்கிறார்கள். அது எல்லாம் உண்மை. திமுக முதலில் ஆட்சிக்கு வருவதற்கு காரணமே அன்றைக்கு இருந்த மாணவர்கள் அணிதான். உணர்வோடு ஹிந்தி வேண்டாம் என்ற அடிப்படையில் அன்று பாடுபட்டார்கள்.
1993-ல் கூட நாங்கள் ஹிந்தி எழுத்துக்களை ஸ்டேட் வங்கி, ரயில்வே ஸ்டேஷன்களில் அழித்தோம். நான்கு நாட்கள் சிறையில் இருந்தோம். இப்பொழுது கூட்டணி சேர்வதை பார்த்தால் முதல் நாள் வரைக்கும் பழனிசாமி தான் முதல்வர் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள். நேற்று டபுள் இன்ஜின் என்று சொல்லி இருக்கிறார். இரண்டு மாடு போகும், ரயில் தண்டவாளங்கள் போகும். டபுள் இன்ஜின் எப்படி? முன்னாள் போகிறவர் யார்? பின்னால் போகிறவர் யார்?இவ்வாறு திமுக எம்எல்ஏ கோ. தளபதி பேசினார்.

