'ஓட்டுக்காக தி.மு.க.,வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் காங்.,'
'ஓட்டுக்காக தி.மு.க.,வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் காங்.,'
ADDED : ஜூலை 19, 2025 03:44 AM

கோவை : ''காங்கிரஸ்காரர்கள், ஓட்டுக்காக தி.மு.க.,வுடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். இதை விட கேவலம் எதுவும் இல்லை,'' என, பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
கோவையில், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஐந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் மீது, கொள்ளை, ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால், ஒரு மாதத்திற்குள் பதவி விலக வேண்டும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். எதுவுமே ஒழுங்காக நடக்கவில்லை என, முதல்வர் வாயில் இருந்து ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கிறது.
எல்லா இடங்களிலும் பிரச்னை நடந்து கொண்டிருக்கும்போது, எல்லோரது வீட்டுக்கும் சென்று, பத்து நிமிடம் பேச முதல்வர் கூறியுள்ளார். 100 நிமிடம் பேசினாலும், தி.மு.க.,வை நம்ப மக்கள் தயாராக இல்லை.
காமராஜரை கொச்சைப்படுத்தியதோடு, 'அதுகுறித்து விவாதிக்க வேண்டாம்' என்கிறார் திருச்சி சிவா. முதல்வரும், ஒரு தலைவரை களங்கப்படுத்தியதாக சொல்லவில்லை; குளிர் காய காத்திருக்கின்றனர் என்றே சொல்லி இருக்கிறார்.
காங்கிரஸ்காரர்கள் ஓட்டுக்காக இன்னும் தி.மு.க.,வுடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். இதை விட கேவலம் எதுவும் இல்லை. அப்பட்டமான ஓட்டு அரசியலை தி.மு.க., முன்னெடுக்கிறது.
ஓட்டுக்காக, 1,000 ரூபாயை கொடுத்துவிட்டு, டாஸ்மாக்கில் 6,000 ரூபாய் வசூலிக்கின்றனர். இதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது கூட்டணி ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக்கை கட்டுப்படுத்துவோம். இவ்வாறு, தமிழிசை தெரிவித்தார்.