பணக்காரர் வீட்டின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்., தலைவர்கள் செல்வர் அமைச்சரின் பேச்சால் கொந்தளிப்பு
பணக்காரர் வீட்டின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்., தலைவர்கள் செல்வர் அமைச்சரின் பேச்சால் கொந்தளிப்பு
ADDED : அக் 10, 2025 02:37 AM
'பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் வருவர்' என, தி.மு.க., அமைச்சர் பெரியசாமி பேசியதால், காங்., கட்சியினர் கொந்தளித்துள்ளனர்.
“ஏழைகளின் மனுக்களை, பாத்ரூமில் வீசியவருக்கு, காங்கிரசாரை குறைசொல்ல தகுதியில்லை,” என, அகில இந்திய காங்., முன்னாள் செய்தி தொடர்பாளர் எஸ்.வி.ரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகி வீராசாமியின் இல்ல திருமண விழாவில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் பெரியசாமி, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அந்த விழாவில், அமைச்சர் பெரியசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அவர் பேசியதாவது:
சாமானியர்களை மதித்து, அவர்களுக்கு அரசியல் அரங்கில் பதவிகள், பொறுப்புகள் வழங்குவதுடன், அவர்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க., தான். அதை யாரும் மறுக்க முடியாது. இங்கு, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி இருக்கிறார்.
காங்கிரசின் பெரிய தலைவர்கள் எல்லாரும் பணக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வருவர்.
ஆனால், தி.மு.க., தான் சாமானியர்களை உயர்த்தி பிடித்து, மதிப்பளிக்கும் கட்சி. பணத்தால், நாம் உயரவில்லை. தி.மு.க.,வால் உயர்ந்துள்ளோம். தமிழக வரலாற்றில் தி.மு.க.,வுக்கு சமமாக, எந்த கட்சியும் வர முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுடன் அவ்வப்போது உரசல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், அமைச்சர் பெரியசாமியின் பேச்சு, காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தமிழக காங்.,கில் ஒரு கோஷ்டி, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி த.வெ.க., உடன் கூட்டணி வைக்குமாறு கூறிவரும் நிலையில், பெரியசாமிக்கு கண்டனம் எழுந்துள்ளது.
அகில இந்திய காங்., முன்னாள் செய்தி தொடர்பாளர் எஸ்.வி.ரமணி கூறிய தாவது:
காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து, கோடீஸ்வரராக இருந்தவர்கள், இப்போது லட்சாதிபதி ஆகி விட்டனர்.
லட்சாதிபதியாக இருந்தவர்கள், இப்போது பிச்சைக்காரர்களாகி விட்டனர். பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு, எல்லாம் காங்கிரஸ் கட்சியில் ஒருபோதும் இல்லை.
கடந்த 1996ம் ஆண்டு அமைச்சராக இருந்த பெரியசாமி, தன்னிடம் ஏழை மக்கள் தந்த மனுக்களை, அவர் தங்கியிருந்த பயணியர் விடுதியில் உள்ள பாத்ரூமில் வீசிச் சென்றுவிட்டார். பத்திரிகைகளில் படத்துடன் அந்த செய்தி வந்தது.
அதை பார்த்து நான், 'பாத்ரூம் பெரியசாமி' என, அப்போது அவரை விமர்சித்தேன். உடனே, காங்., மூத்த தலைவரான மறைந்த மூப்பனார், என்னை அழைத்து கண்டித்தார். கூட்டணி கட்சியில் இருக்கும்போது, அப்படி பேசக்கூடாது என என்னிடம் கூறினார்.
கூட்டணியில் இருக்கும் காங்., பற்றி இதுபோன்று பேசக்கூடாது என, பெரியசாமிக்கு தெரியவில்லை. காங்கிரசார் மீது குற்றச்சாட்டு கூறி விமர்சிக்க, பெரியசாமிக்கு தகுதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -