UPDATED : ஜன 11, 2024 02:25 AM
ADDED : ஜன 11, 2024 02:00 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக அமைச்சர் உதயநிதியிடம் வழங்கினர்.
கடந்த மாதம் 22ம் தேதி தமிழக காங். தலைவர் அழகிரி தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் புயல் பேரிடர் நிவாரண நிதிக்காக தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை முதல்வரை சந்தித்து வழங்க தலைமைச் செயலகம் சென்றனர். அன்று முதல்வர் வரவில்லை என்றதும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதனால் நேற்று காலை முதல்வரை சந்தித்து பணத்தை வழங்க தலைமைச் செயலகம் சென்றனர். நேற்றும் முதல்வர் வரவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டுக்கு வருமாறு காங்கிரசாருக்கு தகவல் தரப்பட்டது.
அரை மணி நேரத்தில் அங்கு சென்று விட்டனர். ஆனாலும் முதல்வரை சந்திக்க முடியவில்லை. இதையடுத்து அமைச்சர் உதயநிதியை சந்தித்து அவரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 18 பேரின் ஒரு மாத சம்பளம் 18 லட்சம் ரூபாய்க்கான காசோலையை நிவாரண நிதிக்கு வழங்கினர்.
அந்த 18 பேரில் ஏழு பேர் வரவில்லை. இரண்டு முறை முயற்சித்தும் முதல்வரை நேரில் சந்தித்து நிவாரணப் பணிகளுக்கான நிதியை வழங்க முடியவில்லையே என்ற வருத்தத்தும் காங். - எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் திரும்பினர்.

