ஆணைய விசாரணைக்கு காங்., எதிர்ப்பு; ஓய்வு பெற்ற நீதிபதி விலக வலியுறுத்தல்
ஆணைய விசாரணைக்கு காங்., எதிர்ப்பு; ஓய்வு பெற்ற நீதிபதி விலக வலியுறுத்தல்
ADDED : அக் 01, 2025 06:13 AM

சென்னை: ''அறிவுரை கழக உறுப்பினராக உள்ள ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், கரூர் நெரிசல் சம்பவம் குறித்த விசாரணையில் இருந்து விலக வேண்டும்,'' என, தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்க காங்கிரஸ் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் அளித்த பேட்டி:
கரூர் மாவட்டத்தில், கடந்த 27ம் தேதி நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரூர் சம்பவம் குறித்து, நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை துவக்கி உள்ளார். அவரின் விசாரணை சந்தேகத்திற்கு உரியது. அரசு பணத்தில் சலுகை பெறுபவர், எப்படி நேர்மையாக விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பார்?
தென் மண்டல அறிவுரை கழக ஆலோசனை குழு உறுப்பினராக, மாநில அரசால் நியமிக்கப்பட்டு உள்ள நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை நேர்மையாக இருக்கும் என கூற முடியாது.
துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையில், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்தார். ஆனால், காவலர்கள் மீது எந்த நடவடிக்கையும், தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை.
இந்நிலையில், மீண்டும் ஒரு விசாரணை ஆணைய தலைவராக, அருணா ஜெகதீசன் நியமிக்கப்பட்டிருப்பது சரியாக இருக்காது.
என்ன நோக்கத்திற்காக ஆணையம் அமைக்கப்படுகிறது; அதன் செயல்பாடுகள் என்ன என, அரசு முறையான அறிவிப்புகளை வெளியிடாமல், அவசரகதியில் அமைக்கப்பட்ட ஆணையம், மக்களை சந்தித்து விசாரணை நடத்தி வருகிறது.
கட்சி கூட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஆணையம் அளிக்கும் பரிந்துரையில், கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டுதல்கள் கொண்டு வரப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார்; இது, நீதிமன்ற விசாரணைக்கு எதிரானது. எனவே, விசாரணையில் இருந்து, நீதிபதி அருணா ஜெகதீசன் விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.