ADDED : பிப் 23, 2024 01:04 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
காங்கிரஸ், தேசத்தையே ஆண்ட கட்சி; சாதனைகளை விட, நிறைய சோதனைகளை கண்ட கட்சி... வாரிசுகள் ஆதிக்கத்தால் வளராமல், வாடி வதங்கி வரும் கட்சி... காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் அதிகம்; தொண்டர்கள் குறைவு.
காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கையான தலைவர்களாக நாடே அறிந்தவர்கள் சோனியா, ராகுல், பிரியங்கா... இவர்களை துதி பாடி அரசியல் செய்யும் பல மாநில தலைவர்கள், அவர்கள் வாரிசுகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்...
இந்த கட்சியில், தேசிய தலைவரையோ, மாநில தலைவரையோ கவுரவிக்க ஒரு பெரிய கூட்டத்தை கூட்ட தொண்டனுக்கு சம்பளம் தர வேண்டும். இல்லை என்றால், யாரும் வர மாட்டார்கள்.
உதாரணம், பிரதமரின் ஜாதி பற்றி தரக்குறைவாக பேசிய வழக்கில், ராகுலுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அவரது எம்.பி., பதவி பறிப்பு என, தீர்ப்பு வந்த அன்று, தமிழக காங்கிரஸ்சார்பில் ரயில் மறியல் போராட்டம்நடத்த, அன்றைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சென்ற போது, அவருடன் போன அந்த நான்கு பேர் சாதனை அல்ல; வேதனை.
தேசிய அளவில் காங்கிரசை காப்பாற்ற, அக்கட்சியின் வரலாற்றை விளக்க, ராகுல் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடந்தார்; பலன் பூஜ்யம்... பா.ஜ.,வை எதிர்க்க தேசம் முழுதும் உள்ள மாநில எதிர்க்கட்சிகள் இணைந்து, 'இண்டியா' கூட்டணியை உருவாக்கினர்.
ஆனால், தொகுதி பங்கீட்டில் மாநில கட்சிகளுடன் கருத்து வேறுபாடு உருவாக்கி, அக்கூட்டணி உதிர்ந்து போகும் நிலையில் உள்ளது.
இனியும், காங்கிரஸ் தொண்டர்களை நம்பி, களத்தில் இறங்கினால் தோல்வி தான் மிஞ்சும் என்பதை உணர்ந்து, சோனியா தேர்தல் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, ராஜ்யசபா எம்.பி.,யாக பார்லிெமன்ட்டுக்குள் செல்ல முடிவு எடுத்து விட்டார்.
சோனியா குடும்பத்துக்கு இதுவரை விசுவாசம் காட்டிய கமல்நாத் போன்ற பல தலைவர்களும், இனி வற்றும் குளத்தில் வாழ முடியாது; வற்றாத குளத்தை தேடுவோம் என்று பா.ஜ., பக்கம் பார்வையை திருப்பியுள்ளனர். எது எப்படியோ... காங்., கட்சி தேய்பிறையாகி கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி.