தேர்தல் கமிஷனுக்கு எதிராக ஆக., 11ல் காங்., ஆர்ப்பாட்டம்
தேர்தல் கமிஷனுக்கு எதிராக ஆக., 11ல் காங்., ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 09, 2025 07:13 AM
சென்னை : தேர்தல் கமிஷனை கண்டித்து, தமிழகம் முழுதும் நாளை மறுதினம் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:
ஒவ்வொரு தேர்தலிலும், ஆளுங்கட்சிக்கு எதிராக ஓட்டு போடும் மக்களின் மனோபாவம் நீண்ட காலமாகவே இருக்கிறது. ஆனால், ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ., மட்டும், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இது மோசடி. இதற்கு, தேர்தல் கமிஷன் உடந்தையாக இருக்கிறது.
கர்நாடகாவில், ஒரு சட்டசபை தொகுதியில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள்; ஒரே அறை கொண்ட வீட்டில் 80 வாக்காளர்கள்; ஒரே வாக்காளருக்கு நான்கு ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு என, குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் காங்., முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்டு உள்ளார்.
தேர்தல் கமிஷனின் இந்த போக்கையும், பா.ஜ.,வுக்கு உடந்தையாக இருப்பதையும் கண்டித்து, தமிழகம் முழுதும் நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.