ADDED : அக் 21, 2024 06:08 AM

கோவை : காங்கிரஸ் செயலர் மயூரா ஜெயகுமாரை நீக்க, கோவையில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
'கோவை காங்கிரசை காப்போம்; காங்கிரசை வளர்ப்போம்' எனும் பெயரில் சிறப்புக் கூட்டம், மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது: அகில இந்திய காங்., செயலர் மயூரா ஜெயகுமார், அவரது உதவியாளர் கருப்புசாமியை, கோவை மாநகர் மாவட்ட தலைவராக நியமித்து, காங்கிரஸ் கமிட்டியை அவருடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி -- ஏ.ஐ.சி.சி., உறுப்பினர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் என, காங்கிரசார் பெரும்பான்மையானோரை ஒதுக்கி வைத்தும், கோவை மாவட்டத்தில் கட்சியின் உண்மை தொண்டர்களை புறக்கணித்தும், கட்சியின் மீது ஈடுபாடு இல்லாத நபர்களை பதவியில் நியமித்தும், கட்சிக்கு எதிராகவும், ராகுலுக்கு துரோகம் விளைவிக்கும் செயல்களிலும் ஜெயகுமார் ஈடுபட்டு வருகிறார்.
ஜெயகுமாரை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கி, கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு அ தில் கூறப்பட்டுள்ளது.
நான் தேசிய அளவில் பொறுப்பில் இருக்கும் தலைவர்; என்னை நீக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. என் வளர்ச்சி பிடிக்காமல் காழ்ப்புணர்ச்சியால் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதன் பின்னணியில் இருப்போர் குறித்து, கட்சி தலைமையிடம் புகார் அளித்துள்ளேன். இதேபோல கூட்டம் கூட்டி, என்னாலும் தீர்மானம் நிறைவேற்ற முடியும். ஆனால், அதில் விருப்பம் இல்லை.
- மயூரா ஜெயகுமார்
செயலர், காங்கிரஸ்