காங்கிரஸ் பலம்; த.வெ.க., அங்கீகரிப்பு: கிரீஷ் ஷோடங்கரால் தி.மு.க., 'ஷாக்'
காங்கிரஸ் பலம்; த.வெ.க., அங்கீகரிப்பு: கிரீஷ் ஷோடங்கரால் தி.மு.க., 'ஷாக்'
ADDED : பிப் 26, 2026 06:42 AM

'நாங்கள் லாப, நஷ்டத்தை எதிர்பார்க்காத தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தவில்லை' என, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தெரிவித்த கருத்து, தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கிரீஷ் ஷோடங்கர் அளித்த பேட்டி: கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிபந்தனையாக உள்ளது; உள்ளாட்சி தேர்தலிலும் அதிகாரப் பகிர்வு வேண்டும். ஆட்சியில் பங்கு வேண்டாம் என எந்த கட்சியும் சொல்ல விரும்பாது. லாபம், நஷ்டம் பாராமல் செயல்பட, தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நாங்கள் நடத்தவில்லை.
தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தரும் கலாசாரம் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் பங்கு என்பது, அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் இருந்து எழுந்த குரல்.
காங்கிரசுக்கு வெளிப்படையாகவே த.வெ.க., அழைப்பு விடுத்தது. காங்கிரசின் பலத்தை த.வெ.க., அங்கீகரித்துள்ளது. தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் இடையே தொடர்பு ஏற்படுவது இயல்பானது. அனைவரிடமும் பேசும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஷோடங்கர் கருத்து, முதல்வர் ஸ்டாலினை அதிருப்தி அடைய வைத்துள்ளது. தி.மு.க., மூத்த எம்.பி., ஒருவரிடம் இது தொடர்பாக பேசிய முதல்வர், 'பார்லிமென்டில் காங்கிரஸ் இன்று எதிர்க்கட்சியாக இருக்க காரணம் நாம் தான். ஆனால், இப்போது அவர்களுக்கு த.வெ.க., பெரியது என்றால் செல்லட்டும்; விட்டு விடுங்கள்' என கூறியிருப்பது, கூட்டணியில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
- நமது நிருபர் -

