காங்கிரஸ், வி.சி., கட்சிகள் 'இண்டி' கூட்டணியில் நீடிக்காது
காங்கிரஸ், வி.சி., கட்சிகள் 'இண்டி' கூட்டணியில் நீடிக்காது
ADDED : செப் 21, 2025 05:44 AM

விழுப்புரம்: 'தமிழக 'இண்டி' கூட்டணியில் காங்., - வி.சி., கட்சிகள், தேர்தல் வரைக்கும்கூட நீடிப்பது சந்தேகம்,'' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் சம்பத் கூறினார்.
விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி:
சரக்கு மற்றும் சேவை வரியில், பிரதமர் மோடி புரட்சி செய்துள்ளார். வரும் 2047ம் ஆண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற பல நடவடிக்கையை பிரதமர் மேற்கொண்டு வருகிறார். நாட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்பட ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டுக்கு முன் நாட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. தற்போது அவை சீர் செய்யப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி., மூலம் மத்திய அரசு வசூலிக்கும் தொகை உள்கட்டமைப்புத் திட்டங்கள், விமான நிலையங்கள் மேம்பாடு, ராணுவம் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஜி.எஸ்.டி., போல் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருவாய் உள்ளோர் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பால் சாதா ரண மக்கள் பயனடைகின்றனர்.
காங்., ஆட்சியில் 350 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது பா.ஜ., அரசின் நடவடிக்கையால் 1.50 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. ரூ.32 லட்சம் கோடி அளவுக்கு முத்ரா திட்டத்தில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
வரும் சட்டசபைத் தேர்தலுக்குள், 'இண்டி' கூட்டணியில் உள்ள காங்., - வி.சி., கட்சிகள் இருக்குமா என்பது சந்தேகம். பா.ஜ.,வில் உள்ள கூட்டணி நிலைத்திருப்பதோடு, தேர்தலுக்குள் மேலும் பல கட்சிகள் வரும்.
இவ்வாறு சம்பத் தெரிவித்தார்.