ADDED : ஜன 29, 2024 05:31 AM
சென்னை: தி.மு.க., வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச, டில்லியில் இருந்து, காங்., தேர்தல் குழு ஒருங்கிணைப்பாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில், சல்மான் குர்ஷித், தமிழக மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.
சத்தியமூர்த்தி பவனில், நிர்வாகிகளிடம் கருத்து கேட்டனர். தமிழக காங்., தலைவர் அழகிரி முதல் தற்போதைய எம்.பி.,க்கள் வரை பலரும் கருத்துக்களை தெரிவித்தனர்.
தி.மு.க.,விடம் கேட்க வேண்டிய, 21 தொகுதிகள் அடங்கிய பட்டியல் தயாரானது. அப்பட்டியல், சத்தியமூர்த்தி பவனிலிருந்து நேற்று லீக் ஆனது. அதை, தமிழக காங்., பிற்படுத்தப்பட்டோர் அணி துணை தலைவர் ரவிராஜ் வெளியிட்டுள்ளார்.
இதனால், அதிருப்தி அடைந்த மூத்த தலைவர் ஒருவர், ரவிராஜின் கையை முறுக்கி, அடிக்க பாய்ந்துள்ளார். இந்த பட்டியல் எந்த அடிப்படையில் தயாரானது என, சில எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பினர். இதனால், அழகிரி, கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அது முற்றி, கைகலப்பாகும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, தமிழக காங்., ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கையில், 'லோக்சபா தேர்தலுக்காக, காங்., போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
'அதுபோல எந்த பட்டியலும் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை; தி.மு.க.,வுக்கு கொடுக்கப்படவும் இல்லை' எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், மேலிட தலைவர்கள் முகுல் வாஸ்னிக்கை சந்திக்க, காங்., பிரமுகர் மயூரா ஜெயக்குமார் சென்றபோது, அங்கிருந்த கார்த்தி சிதம்பரம், 'எம்.பி.,க்கள் மட்டும் தான் முகுல் வாஸ்னிக்கை பார்க்க வேண்டும்; மயூரா ஜெயக்குமாரை எப்படி அனுமதிக்கலாம்?' என்று கேட்டுள்ளார்.
அப்போது, இருவரும் கடும் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். அதை கவனித்த மூத்த தலைவர்கள், சமாதானம் செய்தனர்.
இதே நிலை தொடர்ந்தால் நிலைமை சிக்கலாகும் என்பதை உணர்ந்த டில்லி மேலிடத் தலைவர்கள், 'நிர்வாகிகளை சந்திக்க நேரம் இல்லை; மாலை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் சந்திக்கலாம்' எனக்கூறி, அங்கிருந்து புறப்பட்டு, அறிவாலயம் சென்றனர்.