ADDED : மே 31, 2026 12:33 AM
சென்னை: தேர்தல் முறைகேடு புகார் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சி நிர்வாகிகள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காங்., வேட்பாளர்களுக்கு எதிராக சொந்த கட்சி நிர்வாகிகளே உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதாக புகார்கள் குவிந்தன. இதுபற்றி விசாரிக்க, முன்னாள் எம்.பி., ஜெயகுமார் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு, சத்தியமூர்த்தி பவனில் நேற்று, காங்., வடசென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் புகார்களை பெற்றது. தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கட்சி தலைமை கொடுத்த பணத்தை, இப்போதைய மாவட்ட தலைவர் மதர்மா கனி, முறையாக கட்சியினருக்கு வழங்கவில்லை என, முன்னாள் மாவட்ட தலைவர் திரவியம் ஆதரவாளர்கள் புகார் கொடுத்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த மதர்மா கனி ஆதரவாளர்கள், திரவியம் ஆதரவாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் இந்த வாய்ச்சண்டை கைகலப்பாக மாறியது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் இரு தரப்பையும் தடுத்தனர்.
பின், காங்கிரஸ் மாநில நிர்வாகிகள், இரு தரப்பையும் சமாதானப்படுத்தினர்.
