முன்பதிவு இல்லாத பெட்டிகள் 27 விரைவு ரயில்களில் இணைப்பு
முன்பதிவு இல்லாத பெட்டிகள் 27 விரைவு ரயில்களில் இணைப்பு
ADDED : நவ 21, 2024 01:12 AM
சென்னை:'பயணியரின் வசதிக்காக, 27க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில், தலா நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:
அடுத்த இரண்டு ஆண்டுகளில், 10,000 முன்பதிவில்லாத பெட்டிகள் புதிதாக இணைக்கப்படும் என, ரயில்வே தெரிவித்தது. அதில், 6,000 பொதுப் பெட்டிகளும், 4,000 படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும் அடங்கும். இதன் வாயிலாக கூடுதலாக, 8 லட்சம் பேர் பயன் அடைவர்.
கடந்த ஜூலை முதல் அக்டோபர் வரை, 583 புதிய பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, 229 ரயில்களில் இணைக்கப்பட்டுள்ளன. இம்மாதத்துக்குள், 1,000க்கும் மேற்பட்ட பொது பெட்டிகள் தயாரிக்கப்பட்டு, 647 ரயில்களில் இணைக்க திட்டமிடப்பட்டுஉள்ளது.
விரைவு ரயில்களில், அதிகம் பேர் பயணிக்க வசதியாக, எல்.எச்.பி., வகை பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரயிலிலும், தலா நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வேயில் திட்டமிட்டுள்ள 51 ஜோடி விரைவு ரயில்களில், இதுவரை 24 ரயில்கள், எல்.எச்.பி., பெட்டிகளாக தரம் உயர்த்தப்பட்டு இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் - புதுடில்லி, சென்ட்ரல் - போடிநாயக்கனுார், எழும்பூர் - துாத்துக்குடி உள்ளிட்ட ரயில்களும் இதில் அடங்கும்.
இதனால், 7,900 இருக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த மாதத்துக்குள், 27க்கும் மேற்பட்ட ஜோடி ரயில்கள், எல்.எச்.பி., பெட்டிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன.
இதனால், பொது வகுப்பு பெட்டி பயணியருக்கு, 5,600 இருக்கைகள் கூடுதலாக கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

