ADDED : அக் 18, 2024 10:18 PM
சென்னை:தி.மு.க., நிர்வாகி ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் பிறப்பித்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி விமர்சித்திருந்தார்.
இதையடுத்து, பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, அட்வகேட் ஜெனரலிடம் ஒப்புதல் கோரி, 'சவுக்கு' சங்கர் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு, அட்வகேட் ஜெனரல் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில், சங்கர் மனுத்தாக்கல் செய்தார். ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக, அவமதிப்பு வழக்கை நீதிமன்றமே விசாரணைக்கு எடுக்கக் கோரியிருந்தார்.
மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி; ஆர்.எஸ்.பாரதி சார்பில், வழக்கறிஞர் ரிச்சர்டுசன் ஆஜரானார்.
இருதரப்பு வாதங்களுக்கு பின், மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'விமர்சனத்தை வரவேற்கும் விதமாக, வெளிப்படை நிறுவனமாக நீதித்துறை இருக்க வேண்டும்.
நீதிபதிகளின் நடத்தைக்கு சிறந்த சாட்சி, அவர்களின் மனசாட்சி. சம்பந்தப்பட்ட நீதிபதியே, அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்துள்ளார். எனவே, அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டியதில்லை' என, கூறியுள்ளனர்.
'அரசியல்வாதியாக மட்டுமின்றி, வழக்கறிஞராகவும் உள்ள ஆர்.எஸ்.பாரதி போன்றோர், பொது வெளியில் பேசும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்; உள்நோக்கத்துடன் அவர் பேசியதாக கருதவில்லை' என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

