வரலாற்றை திரும்பி பார்ப்போம்: எம்ஜிஆர் குணமாக காஞ்சி மகா பெரியவர் செய்த அர்ச்சனை
வரலாற்றை திரும்பி பார்ப்போம்: எம்ஜிஆர் குணமாக காஞ்சி மகா பெரியவர் செய்த அர்ச்சனை
UPDATED : ஜன 08, 2024 05:22 PM
ADDED : ஜன 08, 2024 04:13 PM

உடல்நலம் குன்றிய எம்ஜிஆர், அமெரிக்க நாட்டின் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலகட்டம். 'அவருக்கு அளிக்கின்ற மருத்துவச் சிகிச்சைகள் பலன் அளிக்க வேண்டும்' என்று தமிழக மக்கள் ஒன்று திரண்டு, விழித்துளிகள் உருண்டு, ஏகோபித்த குரலில் வேண்டுதல்களை நிகழ்த்திய வண்ணம் இருந்தனர்.
மறுநாள் எம்ஜிஆருக்கு அறுவை சிகிச்சை எனக் குறிக்கப்பட்டிருந்த சூழலில், காஞ்சிபுரம் பரபரப்பாக புழங்கியது. காஞ்சி பரமாச்சாரியார் நேரே காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றார். அம்மன் சிலையின் அருகில் அமர்ந்தார். அம்மனுக்கு 108 பால்குடங்கள் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தார். அங்கேயே அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தார்.
'எம்ஜிஆர் குணமாகி வெளிவந்திட அருள் புரிய வேண்டும்' என்று பரமாச்சாரியார் மிகுந்த உருக்க உணர்வோடு தன் ஆத்மார்த்த அர்ப்பணிப்பை அரங்கேற்றினார்.
எம்ஜிஆர் குணமானார். சென்னை திரும்பினார். அப்போது அவரை அடிக்கடிச் சந்தித்து கொண்டு இருந்தவர்களில் பத்திரிகையாளர் மணியனும் ஒருவர். இத்தகைய ஒரு சந்திப்பின்போது பரமாச்சாரியாரின் இந்த பாலாபிஷேகம் பற்றி எம்ஜிஆரிடம் விவரித்துவிட்டார். அதனைக் கேட்ட எம்ஜிஆர் நெகிழ்ந்து போனார். ஒரு நாள் சட்டசபைக்குக் கிளம்பினார். அப்போது திடீரென்று, காரை காஞ்சிபுரத்துக்குத் திருப்பச் சொன்னார். நேராகப் பரமாச்சாரியாரைச் சந்தித்தார். கண்ணீர் மல்க உருகி...உருகி அவருக்கு நன்றி தெரிவித்தார். இந்த தகவல் கருணாநிதியின் செவிகளை எட்டி விட்டது. சட்டசபையில் கருணாநிதி எழுந்தார்.
'முதல்வர் புரோட்டோகால் இல்லாமல் இப்படி எல்லாம் காஞ்சி மடத்திற்குச் சென்றது சரிதானா? 'என்று அவர் வினாக் கணை தொடுத்தார். சொல்வாக்குச் சொக்கர் கருணாநிதி இவ்வாறு கேட்க, செல்வாக்குச் செல்வர் எம்ஜிஆர் பதிலடி கொடுத்தார்.
அப்போது எம்ஜிஆர் பதில் இதோ:
முஸ்லிம்கள் மசூதிக்குச் செல்கின்றனர். கிருத்தவர்கள் மாதா கோயிலுக்குப் போகிறார்கள். அது அவர்களின் மத உரிமை. அதேபோல நானும் காஞ்சிபுரம் சென்று வந்திருக்கிறேன். இது என் தனிப்பட்ட உரிமை என்றார்.
ஆர் நூருல்லா, செய்தியாளன், 9655578786