ஆதிபராசக்தி சித்தர் குருபீடத்தில் பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை
ஆதிபராசக்தி சித்தர் குருபீடத்தில் பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை
ADDED : அக் 17, 2024 01:55 AM

மேல்மருவத்துார்:மேல்மருவத்துாரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், இன்று பங்காரு அடிகளார் சிலை நிறுவப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துாரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைத்து, 1970ம் ஆண்டு முதல் பங்காரு அடிகளார் அருள்வாக்கு கூறிவந்தார்.
சித்தர் பீடத்தில், வழிபாடுகள் தங்கு தடையின்றி நடக்கவும், நிர்வகிக்கவும் ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ பண்பாட்டு அறநிலையம் செயல்படுகிறது.
ஆடவர், மகளிர் என, இரு பிரிவுகளாக செயல்பட்டு, கல்வி, மருத்துவம், மற்றும் பண்பாட்டு சேவைகளை செய்து வருகிறது. ஆன்மிக புரட்சி செய்த ஆன்மிக குருவான பங்காரு அடிகளார், கடந்த ஆண்டு, அக்., மாதம் 19ம் தேதி முக்தி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து, சித்தர் பீட வளாகத்தில், பங்காரு அடிகளார் திருவுருவச்சிலையை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், இன்று குருபீடத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கிறார்.
அதன்பின், நாளை கலச விளக்கு வேள்வி பூஜையும், நாளை மறுநாள் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அருள்தரிசனமும் நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த செவ்வாடை பக்தர்கள் செய்து வருகின்றனர்.