ADDED : பிப் 13, 2024 12:13 AM

போத்தனூர்;கோவையில் ரயிலை கவிழ்க்க, தண்டவாளங்களில் கற்களை வைத்த வடமாநிலத்தவர் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கோவை, நேற்று முன்தினம் நள்ளிரவு, கேரளாவிலிருந்து போத்தனூர் நோக்கி சரக்கு ரயில் ஒன்று பி லைனில் வந்துகொண்டிருந்தது. சிட்கோ ரயில்வே மேம்பாலத்திற்கு சிறிது முன்பாக ஏ லைனில் சுமார் மூன்றடி நீளமுள்ள மைல்கல் மற்றும் மெட்டல் கற்கள் இருப்பதை பைலட் கண்டார். போத்தனூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு, தகவல் தெரிவித்து சென்றார்.
உடனடியாக டிராக்மேன் அங்கு சென்று கற்களை அகற்றினார். அப்போது அப்பாதையில் காரைக்காலிலிருந்து, எர்ணாகுளம் நோக்கி செல்ல வந்த டீ கார்டன் எக்ஸ்பிரஸ் ரயில், 10 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பின், புறப்பட்டு சென்றது.
இதன் தொடர்ச்சியாக, மங்களூருவிலிருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் லோகோ பைலட், போத்தனூர் ஸ்டேஷன் மாஸ்டரிடம், மேற்குறிப்பிட்ட கற்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சுமார் ஒரு கி.மீ., முன்பாக, ரயிலின் சப்தம் வேறுபட்டதாக கூறி சென்றார்.
போத்தனூர் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
எளிதில் உடையும் கற்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. போலீசார் விசாரணையில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, ரயில்வே மேம்பாலம் பகுதியில் தங்கியுள்ள, உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராகேஷ், 21, ஜூகல், 19, பப்லு, 31 ஆகியோர் சிக்கினர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், 10ம் தேதியன்று மூவரும் ரயில் தண்டவாளத்தை கடந்துள்ளனர். அங்கு வந்த பாலக்காடு ரயில்வே பாதுகாப்பு படையினர் மூவருக்கும், அபராதம் விதித்துள்ளனர்.
ஆத்திரமடைந்த மூவரும் டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று, மது குடித்துள்ளனர். அப்போது ரயிலை கவிழ்க்க திட்டமிட்டு, ஏ லைனில் கற்களை வைத்துவிட்டு, அங்குள்ள புதர் பகுதியில் ஒளிந்திருந்து, ரயில் வருகிறதா என பார்த்துள்ளனர்.
ஆனால் சரக்கு ரயில் பைலட், கற்களை பார்த்து தகவல் கூறியதால், அகற்றப்பட்டதை கண்டனர். தொடர்ந்து ஒரு கி.மீ., சென்று, பி லைனில் கற்களை வைத்ததும் தெரிந்தது. தொடர்ந்து மூவரும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர்.