தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுமானம்: ஆய்வுக்கு உத்தரவு
தடை செய்யப்பட்ட பகுதிகளில் கட்டுமானம்: ஆய்வுக்கு உத்தரவு
ADDED : மார் 14, 2024 12:31 AM
சென்னை:திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் முன்பு சம்பந்தப்பட்ட இடம், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் - சி.ஆர்.இசட்டின் வரம்புக்குள் வருகிறதா என்பதை, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் - சி.ஆர்.இசட் விதிகளின்படி தடை செய்யப்பட்ட பகுதிகளில், சுற்றுச்சூழல் விதிகளை மீறி பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக, சென்னை, கோவளத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
கடலோர ஒழுங்குமுறை மண்டலம் சி.ஆர்.இசட்டின் வரம்புக்குள் வரும் பகுதிகளில், சுற்றுச்சூழல் விதிகளை மீறி கட்டுமானங்கள் நடப்பது பற்றி பொதுப்பணித்துறை, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், உவர்நீர் மீன் வளர்ப்பு மத்திய நிறுவனம் ஆகியவை பதிலளிக்க வேண்டும்.
கட்டுமானங்கள் நடக்கும் பகுதிகள், சி.ஆர்.இசட்., விதிகளின்படி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் வருகிறதா என்பதை, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்து கண்டறிய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

