உயர விதிகளை தளர்த்தினாலும் லிப்ட் பிரச்னை தீரவில்லை கட்டுமான துறையினர் புகார் கட்டுமான துறை கவலை
உயர விதிகளை தளர்த்தினாலும் லிப்ட் பிரச்னை தீரவில்லை கட்டுமான துறையினர் புகார் கட்டுமான துறை கவலை
ADDED : மார் 14, 2024 12:38 AM

சென்னை:தமிழகத்தில், பொது கட்டட விதிகள் அடிப்படையில், அடுக்குமாடி கட்டடங்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதாவது, 39 அடி முதல், 60 அடி உயரம் வரையிலான அடுக்குமாடி கட்டடங்கள் அதிக உயரமில்லாதவை; இதற்கு அப்பால் உள்ள கட்டடங்கள் மட்டுமே, அதிக உயரமான அடுக்குமாடி கட்டடங்கள் என, வகைப்படுத்தப்படுகின்றன.
அதிக உயரமில்லாத பிரிவை சேர்ந்த கட்டடங்களின் குறைந்தபட்ச உயரம், 39 அடி என்பது, 46 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சில நாட்கள் முன் பிறப்பித்தது.
ஆனால், இந்த வகை கட்டடங்களின் அதிகபட்ச உயரம், 60 அடியாகவே தொடர்ந்து பராமரிக்கப்படும் என, அரசாணையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, 60 அடிக்கு மேற்பட்ட கட்டடங்கள் மட்டுமே, அடுக்குமாடி கட்டடங்கள் பிரிவில் வரும் என, பொது கட்டட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது, தேசிய கட்டட விதிகளில், குறிப்பிடப்பட்ட வரையறைக்கு மாறாக இருப்பதால், 60 அடி உயரம் வரையிலான கட்டடங்களில், லிப்ட் அமைப்பதற்கான உரிமம் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.
நடவடிக்கை எடுக்கணும்
பொது கட்டட விதிகளில், கட்டடங்களில் குறைந்தபட்ச உயரம், 39 அடியில் இருந்து, 46 அடியாக உயர்த்தப்பட்டது ஒரு வகையில் நல்லது. அதே நேரம், பணி நிறைவு சான்று தொடர்பான விலக்கு அளிக்கப்பட்டது, விதிமீறலை கண்காணிக்கும் பொறுப்பை அதிகரிக்கும்.
இதில், 60 அடி என்ற உச்சபட்ச வரம்பு திருத்தப்படாத நிலையில், லிப்ட் உரிமம் பெறுவதில் உள்ள பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த விதிகளை மத்திய அரசிடம் தெரிவித்து, லிப்ட் உரிமம் பிரச்னையை தீர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பி.மணிசங்கர்
தமிழக வீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்

