விருதுநகரில் 765 கிலோ வோல்ட் திறன் துணை மின் நிலைய கட்டுமானம் நிறைவு
விருதுநகரில் 765 கிலோ வோல்ட் திறன் துணை மின் நிலைய கட்டுமானம் நிறைவு
ADDED : டிச 04, 2024 11:57 PM
சென்னை: விருதுநகர் மாவட்டத்தில், 765 கிலோ வோல்ட் திறன் உடைய துணை மின் நிலையத்தின் கட்டுமானப் பணி நிறைவடைந்தது. இதை இயக்கத்திற்கு கொண்டு வரும் பணியில், மின் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுதும் மின் தேவை அதிகரித்து வருகிறது
அதற்கு ஏற்ப அதிக மின்சாரத்தை, பல பகுதிக்கு எடுத்து செல்ல, வட சென்னை அனல் மின் நிலைய வளாகம், விழுப்புரம், அரியலுார், கோவை மற்றும் விருதுநகரில், தலா, 765 கி.வோ., திறன் துணை மின் நிலையம், அவற்றை இணைக்க அதே திறனில் வழித்தடம் அமைக்க, மின் வாரியம் முடிவு செய்தது.
இதற்கான பணிகள், 2015 - 16ல் துவங்கின. அரியலுார், 765 கி.வோ., துணை மின் நிலையம், 2023 டிசம்பரிலும்; வட சென்னை, 765 கி.வோ., துணை மின் நிலையம், கடந்த பிப்ரவரியிலும் செயல்பாட்டிற்கு வந்தன.
தொடர்ந்து, அவற்றின் வழித்தடம் செயல்பாட்டிற்கு வந்தது. இது, 5,000 மெகா வாட் மின்சாரம் எடுத்து செல்லும் திறன் உடையது.
தற்போது, விருதுநகரில் அமைக்கப்பட்டு வந்த மூன்றாவது, 765 கி.வோ., துணை மின் நிலையத்தின் கட்டுமான பணி நிறைவடைந்துஉள்ளது.
அங்கு தலா, 1,500 மெகா வோல்ட் ஆம்பியர் திறனில் இரண்டு, 'பவர் டிரான்ஸ்பார்மர்'கள் நிறுவப்பட்டு உள்ளன. இவற்றை சோதனை செய்து, இயக்கத்திற்கு கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுஉள்ளனர்.
இதன் வாயிலாக அங்கு, 2,400 மெகா வாட் மின்சாரத்தை கையாள முடியும். திட்ட செலவு 3,000 கோடி ரூபாய்.
விருதுநகர் துணை மின் நிலையம், கோவையில் அமைக்கப்பட உள்ள துணை மின் நிலையத்துடன் இணைக்கப்படும்.
இன்னும், கோவையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி துவங்கப்படாத நிலையில், கோவை - விருதுநகர் இடையே வழித்தட பணி நடக்கிறது.
தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் காற்றாலை, சூரியசக்தி மின்சாரம், விருதுநகர் துணை மின் நிலையம் வாயிலாக, கோவை - அரியலுார் வழியாக சென்னைக்கு எடுத்து வரப்பட்டு வினியோகம் செய்யப்படும்.