ஆங்கிலத்தில் மின் கட்டண எஸ்.எம்.எஸ்., தமிழில் அனுப்ப நுகர்வோர் எதிர்பார்ப்பு
ஆங்கிலத்தில் மின் கட்டண எஸ்.எம்.எஸ்., தமிழில் அனுப்ப நுகர்வோர் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 08, 2025 01:02 AM
சென்னை:மின் கட்டண விபரம் தொடர்பான குறுந்தகவலான, எஸ்.எம்.எஸ்., ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பப்படுவது, நுகர்வோரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆங்கிலம் தெரியாதவர்கள் அறிந்து கொள்ள வசதியாக, தமிழில் தகவல் அனுப்ப வேண்டும் என்பது, நுகர்வோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
2 கோடி நுகர்வோர் வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை, மின் வாரிய ஊழியர்கள், மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.
அதன்பின், 2 கோடி நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு, மின் கட்டண விபரம், எஸ்.எம்.எஸ்., வாயிலாக அனுப்பப் படுகிறது.
மின் கட்டணம் செலுத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன், நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும். மின் கட்டணம் செலுத்தியதும், அந்த விபரம், எஸ்.எம்.எஸ் ., வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.
மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் வினியோகம் துண்டிக்கப்படும் என்ற விபரமு ம், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப் படுகிறது.
ஆனால், எஸ்.எம்.எஸ்., வழியே அனுப்பப்படும் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன.
தமிழில் அனுப்புவதில்லை. இதனால், ஆங்கிலம் தெரியாத பலரால், மின்வாரியம் என்ன அனுப்பி உள்ளது என்ற விபரத்தை அறிந்து கொள்ள முடிவதில்லை.
இது குறித்து, மின் நுகர்வோர் கூறுகையில், 'மின் வாரியத்திடம் இருந்து வரும், எஸ்.எம்.எஸ்., மற்றும் மின் கட்டண ரசீதில் உள்ள விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளன.
'மத்திய அரசு ஹிந்தி யில் வெளியிட்டால் கண்டனம் தெரிவிக்கும், தி.மு.க., கூட்டணி கட்சியினர், இதில் மவுனம் காக்கின்றனர். தமிழகத்தில் தமிழில் அனுப்பாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
இடமில்லை 'ஆங்கிலம் தெரியாதவர்களும், தகவல் அறிந்து கொள்ள வசதியாக, மின்வாரியம் தமிழ் மொழியில் விபரங்களை அனுப்ப வேண்டும்' என்றனர்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எஸ்.எம்.எஸ்., சுருக்கமாக அனுப்பப்படும். தமிழில் அதிக எழுத்துகள் வருவதால், எஸ்.எம்.எஸ்., அனுப்ப இடம் இல்லை.
'இதனால், ஆங்கிலத்தில் அனுப்பப்படுகிறது. விரைவில் தமிழில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

