ADDED : அக் 18, 2025 08:06 AM

சென்னை: முறையாக வழக்கறிஞர் உடை அணியாமல், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, வழக்கு விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞரும், பா.ஜ., மாநில செயலருமான அஸ்வத்தாமனுக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு பேரூராட்சி அலுவலக இளநிலைப் பொறியாளராக இருப்பவர் ரமேஷ், 48. இவர், கடந்த ஜூலை 19ல், உதவி செயற்பொறியாளர் தியாகராஜன் என்பவருடன், தலைஞாயிறு பேரூராட்சி ஞானம்பாள் கோவில் தெருவில் உள்ள, செப்பனிடப்பட்ட சாலையை, அளவீடு செய்ய சென்றார்.
அப்போது அங்கு வந்த, தலைஞாயிறு பேரூராட்சி துணைத் தலைவர் கதிரவன், பேரூராட்சி அனுமதி இல்லாத சாலை ஒன்றை அளவீடு செய்யும்படி, இளநிலைப் பொறியாளர் ரமேஷிடம் வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த ரமேஷ் மீது, கதிரவன் தனது இரு சக்கர வாகனத்தை மோதி உள்ளார்.
இதில், படுகாயமடைந்த ரமேஷ் அளித்த புகாரின்பேரில், தலைஞாயிறு போலீசார், கதிரவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கதிரவன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி கே.ராஜசேகர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, வழக்கறிஞர் அஸ்வத்தாமன் ஆஜரானார். அவர் வழக்கறிஞர் உடை அணியாமல், வெள்ளை சட்டை மட்டும் அணிந்து ஆஜரானார்.
இதை பார்த்த நீதிபதி, நீதிமன்றத்தில் கண்ணியத்துடன் ஆஜராக வேண்டாமா; எந்த உடையுடன் ஆஜராக வேண்டும் என்பது தெரியாதா என கேள்வி எழுப்பி, அவரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தார். அதற்கு, தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக, மருத்துவ சிகிச்சையில் உள்ளதால், வழக்கறிஞர் உடை அணியாமல் விசாரணைக்கு ஆஜரானதாக அஸ்வத்தாமன் தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, இது தொடர்பாக அஸ்வத்தாமன் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுப்பதாகவும், வரும் 22ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.