ADDED : ஆக 21, 2025 05:53 AM

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புகார் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு நவ., 17ல் ஊடகம் ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டி, நீதித்துறையை அவமதிக்கும் வகையிலும், நீதிமன்ற செயல்பாடுகளை மோசமாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளதாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர், டி.ஜி.பி.,க்கு புகார் அளித்திருந்தார்.
ஆனால், 'அந்த புகார் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை' என, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை, சென்னை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்து, சீமானுக்கு எதிரான புகார் மீது, வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

