UPDATED : பிப் 09, 2024 01:16 PM
ADDED : பிப் 09, 2024 12:51 PM

ஆட்டம் தாங்க முடியலைங்க... என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.யாரை சொல்றீங்க பா... எனக் கேட்டார், அன்வர்பாய்.பெரம்பலுார் மாவட்டம், ஆலத்துார் ஒன்றிய தி.மு.க., நிர்வாகியா, 42 வருஷமா ஒருத்தரே கோலோச்சுறாரு... இவர் தான்,
இப்ப ஒன்றிய நிர்வாகத்துலயும் முக்கிய புள்ளியா இருக்காருங்க...அ.தி.மு.க.,வினருக்கு, டெண்டர் ஒதுக்கீடு பண்றாரு, 100 நாள் வேலை திட்டத்துல, 10 சதவீதம் கமிஷன் வாங்குறாரு, மெரிட்ல தலையாரி வேலை கிடைச்சவங்களிடம், நான் சொல்லி தான் கொடுத்தாங்கன்னு, லட்சக்கணக்குல வசூல் பண்றாருன்னு, இவர் மேல ஏகப்பட்ட புகார்கள் குவியுதுங்க...சமீபத்துல, ரேஷன் கடை விற்பனையாளர்கள் 10 பேரை நியமிச்சதுலயும், கணிசமான பணத்தை கறந்துட்டாருங்க... தன் தொகுதி மேம்பாட்டு நிதியில செய்ற வேலைகள்ல எந்த கமிஷனும் வாங்க கூடாதுன்னு, அமைச்சர் சிவசங்கர் சொல்லியிருக்காருங்க...ஆனா, அதுலயும் கமிஷனை கறாரா கேட்டு வாங்கிடுறாருங்க... இப்படி சம்பாதிக்கிற பணத்துல, தன் மருமகன் பெயர்ல சொத்துக்களை வாங்கி குவிச்சிட்டு இருக்காருங்க... என்றார், அந்தோணிசாமி.கிருஷ்ணமூர்த்தி இப்படி உட்காரும்... என, நண்பரை உபசரித்த குப்பண்ணாவே, புகார் தந்தவா மேலயே வழக்கு போடறார் ஓய்... என்றார்.யாருவே அது... எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை, போன மாசம், அந்த பகுதி கவுன்சிலரின் கணவர் அடிச்சுட்டார்... அவரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது பண்ணா ஓய்...ஆனா, கோர்ட்ல அவரை, உடனே ஜாமின்ல விடுவிச்சுட்டா... இந்த புகாரை விசாரிச்ச போலீஸ் அதிகாரி, பாதிக்கப்பட்ட பெண் மேலயும் மூணு பிரிவுகள்ல வழக்கு போட்டுட்டார் ஓய்...அதிகாரி லேசுப்பட்டவர் இல்ல...
கடைக்காராளை மிரட்டி மாமூல் கேட்ட ரவுடி மேல வழக்கு பதிவு பண்ணாம இழுத்தடிச்சார் ஓய்...அதிகாரிகள் கூப்பிட்டு கண்டிச்ச பிறகு தான், வழக்கு போட்டு ரவுடியை கைது பண்ணார்... ரவுடிகளிடம் மாமூல் வாங்கறதால தான், அவாளுக்கு ஆதரவா நடந்துக்கறார்னு சக போலீசாரே புலம்பறா ஓய்... என்றார், குப்பண்ணா.மோகன், இந்த பேப்பரை அங்க வையும்... என்ற அண்ணாச்சியே, சீட்டுக்கு போட்டி போடுதாவ வே... என்றார்.எந்த கட்சியில பா... எனக் கேட்டார், அன்வர்பாய்.கொங்கு மண்டல பா.ஜ.,வின் முக்கிய புள்ளிகளை தான் சொல்லுதேன்... சட்டசபை தேர்தல்ல தோற்றாலும், அண்ணாமலைக்கு மாநில தலைவர், முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவிகளை தந்திருக்காங்கல்லா...அந்த மாதிரி, லோக்சபா தேர்தல்ல நின்னு தோற்றாலும், கருணை அடிப்படையில ஏதாவது பதவியை பிடிச்சிடலாம்னு நினைக்காவ... நீலகிரி தனி தொகுதியில, முருகன் நிற்கிறது உறுதியாயிட்டு வே...கோவை தொகுதிக்கு, மூணு சீனியர்கள் முட்டி மோதுதாவ... வானதியும், அண்ணாமலையும் இந்த பட்டியல்ல இல்ல... அதே மாதிரி பொள்ளாச்சிக்கும், ரெண்டு பேர் முண்டா தட்டுதாவ வே...இப்படி ஆளாளுக்கு ஆசைப்பட்டாலும், பூத் கமிட்டி, வார்டு வேலை செய்யுறதுக்கு பல இடங்கள்ல ஆளே இல்ல... புதுசா ஆட்கள் போடணும்னா, தேர்தல்ல நிற்க ஆசைப்படுறவங்க, காசை கண்ணுலயே காட்ட மாட்டேங்காவ... வேட்பாளரா அறிவிச்சா தான், கல்லா பெட்டியை திறப்பாங்களான்னு, கட்சி தொண்டர்கள் புலம்புதாவ வே... என முடித்தார், அண்ணாச்சி.அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது

