ADDED : ஆக 15, 2024 05:10 AM

சென்னை: தொடர் விடுமுறையொட்டி, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் புறப்பட்டு சென்றனர். இதனால், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் நேற்று அதிகமாக இருந்தது.
இன்று சுதந்திர தினம் விடுமுறை. நாளை வெள்ளி கிழமை ஒரு நாள் விடுப்பு எடுத்தால், சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை வருகிறது. எனவே, சென்னை போன்ற பெரிய நகரங்களில் இருக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். பயணியரின் தேவைக்கு ஏற்ப, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து நேற்று மாலை முதல் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட்டு சென்றதால், தாம்பரம், பெருங்களத்துார் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும், பயணியர் கூட்டம் அலைமோதியது.
சிறப்பு பஸ்கள் இயக்கம்
அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, துாத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கு நேற்று 450க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல், வரும் 16, 17ம் தேதிகளிலும் 365 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதேபோல், கோயம்பேட்டில் இருந்தும், மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
விமான கட்டணம் உயர்வு
விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து கோவை, மதுரை, சேலம், துாத்துக்குடி, திருச்சி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி, சென்னை-யில் இருந்து துாத்துக்குடி செல்லும் விமான கட்டணம் 13,825 ரூபாயாகவும், மதுரைக்கு 17,865 ரூபாயாகவும் இருந்தது.