ADDED : மார் 07, 2024 11:41 AM
சென்னை:ஆராய்ச்சி மற்றும் கல்வியில் இணைந்து செயல்படுவதற்காக, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய மருத்துவக் குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை மத்திய சித்தா மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், இந்திய அரசின், தேசிய மருத்துவ குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது.
தேசிய மருத்துவக் குழு தலைவர் வைத்யா ஜெயந்த் யஷ்வந்த், மத்திய சித்தா மருத்துவ ஆராய்ச்சிக் குழும இயக்குனர் டாக்டர் முத்துக்குமார் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து, டாக்டர் முத்துக்குமார் கூறியதாவது:
மருத்துவம், ஆராய்ச்சி, கல்வி போன்றவற்றில், இளநிலை மற்றும் முதுநிலை சித்த மருத்துவர்களின் எதிர்கால திட்டங்களுக்கு, இந்த ஒப்பந்தம் பயனுள்ளதாக இருக்கும். தேசிய மருத்துவக் குழுவுடன் இணைந்து செயல்படுவதால், ஆராய்ச்சிகள் வாயிலாக சித்தா மருத்துவத்தின் சிகிச்சை தரத்தை, மதிப்பாய்வு வாயிலாக உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

