'டிபாசிட்' தொகையை திருப்பி தர மறுப்பு 'தாட்கோ' மீது ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு
'டிபாசிட்' தொகையை திருப்பி தர மறுப்பு 'தாட்கோ' மீது ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு
ADDED : மே 03, 2026 11:56 PM
சென்னை: 'தாட்கோ' வாயிலாக நடத்தப்படும், 'டெண்டர்' ஒதுக்கீட்டிற்கு பின், 'டெண்டர்' கிடைக்காத நபர்கள் செலுத்திய, 'டிபாசிட்' தொகையை, அதிகாரிகள் திருப்பி தர மறுப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாட்கோ என்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், வீடு கட்டுவது, சாலை அமைப்பது, பள்ளி, கல்லுாரி, விடுதிகள் கட்டுவது போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
இதற்கான அறிவிப்புகள், www.tahdco.com என்ற இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டு, தகுதியான நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. ஒப்பந்தத்தில் பங்கேற்கும் நிறுவனங்களிடம், 'டெண்டர்' மதிப்பை பொறுத்து, 5,000 முதல் 25,000 ரூபாய் ரை, 'டிபாசிட்' தொகை வசூலிக்கப்படும்.
இவ்வாறு பெறப்படும், 'டிபாசிட்' தொகையை, டெண்டர் முடிந்த பின், அது கிடைக்காத நபர்களுக்கு திரும்ப வழங்குவது வழக்கம். ஆனால், தாட்கோவில் அதிகாரிகளே டிபாசிட் தொகையை வைத்துக் கொள்வதாக, ஒப்பந்த நிறுவனங்கள் குற்றம் சாட்டி உள்ளன.
இதுகுறித்து, மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், தாட்கோ ஒப்பந்ததாரருமான செல்வகுமார் கூறியதாவது:
தாட்கோ மேலாண்மை இயக்குநராக, கந்தசாமி பொறுப்பேற்ற பின், டெண்டர் அறிவிப்பு, பணப்பட்டுவாடா முறையில், சட்ட விதிகளுக்கு மாறாக, பல்வேறு மாற்றங்களை தன்னிச்சையாக செய்துள்ளார்.
இது குறித்து, 'ஆர்.டி.ஐ.,யின் கீழ் தகவல் கோரினால், தகவல் தருவதில்லை. 'எம்., செட்டில்மென்ட், டிபாசிட்' தொகை போன்றவற்றை திருப்பி தர மறுப்பது சட்ட விரோதம். அந்தத் தொகையை திரும்ப ஒப்படைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
