அதிகாரிகளுக்கு அறிவுரை பேச்சு தி.மு.க., - எம்.பி.,யால் சர்ச்சை
அதிகாரிகளுக்கு அறிவுரை பேச்சு தி.மு.க., - எம்.பி.,யால் சர்ச்சை
ADDED : ஏப் 18, 2025 09:35 PM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட, சேஷம்பாடி கிராமத்தில் நேற்று 261 பேருக்கு, கலைஞரின் கனவு இல்லம் வேலையை துவங்குவதற்கான அனுமதி கடிதம், நேற்று அளிக்கப்பட்டது. இதற்கான விழாவில் தமிழக அமைச்சர் கோவி.செழியன், தி.மு.க, ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில், கல்யாணசுந்தரம் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்குவது போல் பேசிய பேச்சு, சர்ச்சையாகி உள்ளது.
அவர் பேசியதாவது:
அரசு எந்த திட்டம் போட்டாலும், அரசுக்கு நற்பெயரை வாங்கிக் கொடுப்பது, அரசு அதிகாரிகள் தான். கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெரியவர் ஒருவர், 'கும்பகோணத்தில் முறையான குடிநீர் இல்லை, சாலை இல்லை, தெரு விளக்கு இல்லை' என முறையிட்டார். கேட்டதும் உடனே எப்படி கிடைக்கும்?
குழந்தை பிறக்க வேண்டும் என்றால், திருமணம் ஆனபின், பத்து மாத காலம் பொறுமையாக இருக்க வேண்டும். திருமணமானதும், உடனே குழந்தை பிறக்க வேண்டும் என்றால், அது தவறாகத்தான் இருக்கும்.
திருமணத்துக்கு முன்பாக காதலித்து, உறவில் இருந்து கர்ப்பமாகி இருந்தால் தான், திருமணம் ஆன அன்றே குழந்தை பிறக்கும்.
இதையெல்லாம் அதிகாரிகள் மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு கல்யாணசுந்தரம் பேசினார்.

