ADDED : அக் 18, 2025 07:39 AM

தங்கபாலு தலைமையிலான, காங்கிரஸ் சொத்து மீட்பு குழுவினர், ஊட்டி சென்றபோது, லோயர் பஜாரில் உள்ள ஜனதா தளம் அலுவலகத்துக்கும் சென்றனர்.
இதையடுத்து, ஊட்டி நகர ஜனதா தளம் தலைவர் முஸ்தபா, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இது குறித்து விசாரிப்பதாக, ஊட்டி டி.எஸ்.பி., நவீன்குமார் தெரிவித்தார்.
முஸ்தபா கூறுகையில், “ஜனதா தளம் கட்சி அலுவலகம், பல ஆண்டுகளாக ஊட்டி லோயர் பஜாரில் இயங்குகிறது. இந்நிலையில், தங்கபாலு தலைமையில் பலர் எங்கள் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து பார்வையிட்டனர்.
“இதனால், எங்கள் அலுவலகத்தை கைப்பற்ற முயற்சி நடப்பதாக சந்தேகம் எழுகிறது. எனவே, பாதுகாப்பு கேட்டு, அந்த குழுவினர் மீது போலீசில் புகார் அளித்துள்ளேன்,” என்றார்.
இதற்கிடையே, தங்கபாலு கூறுகையில், “தமிழகம் முழுதும் காங்., சொத்துகளை அறிந்து, அதை மீட்க ஆய்வு செய்தோம். ஜனதா தளம் கட்சியினர் தேவையில்லாமல் பதற்றப்பட்டு பிரச்னையை கிளப்புகின்றனர். அந்த இடம் ஆக்கிரமிப்பில் இருப்பது உறுதியானால், காங்., அதை கட்டாயம் கைப்பற்றும்,” என்றார்.