கிராம சபைகளில் முதல்வர் போலவே பிரதமரும் பேச அரசு அனுமதிக்குமா? தன்னாட்சி அமைப்பு கேள்வி
கிராம சபைகளில் முதல்வர் போலவே பிரதமரும் பேச அரசு அனுமதிக்குமா? தன்னாட்சி அமைப்பு கேள்வி
ADDED : அக் 18, 2025 07:42 AM

சென்னை: ''தேர்தலுக்காக, கிராம சபை கூட்டங்களை, தி.மு.க. பயன்படுத்துகிறது,'' என, தன்னாட்சி அமைப்பின் தலைவர் ஜாகிர் ஹுசைன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை
தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில், கடந்த 11ம் தேதி கிராமசபை கூட்டம் நடந்தது. இக்கூட்டங்களில், முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றார்.
அப்போது, தி.மு.க., அரசு திட்டங்களையும், ஊராட்சிகளுக்கு தேவையான மூன்று முக்கிய தேவைகளையும் விவாதித்து, தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தினார்.
அதன்பின், ஊராட்சி தலைவர்களும், கிராம மக்களும், அரசின் திட்டங்களை பாராட்டி பேசியதால், அது ஒரு பாராட்டு விழா போன்றும், ஒரு 'ஆன்லைன்' குறைதீர் நிகழ்ச்சி போன்றும் இருந்தது.
தமிழக அரசின் இந்த செயல், அரசியலமைப்பு சட்டத்தால் நிறுவப்பட்ட, கிராமசபைகளை மதிக்காமல், சிறுமைப்படுத்தும் செயல். இது கண்டிக்கத்தக்கது.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாத கிராமசபைகளில், முதல்வரே நேரடியாக 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே குறைகளை கேட்பது, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலன்றி வேறில்லை.
முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியதுபோல், பிரதமர் மோடியும் உரையாற்ற வேண்டும் என வலுக்கட்டாயமாக தலையிட்டால், மாநில அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா?
எனவே, கிராம சபைகளில், தமிழக அரசு வலுக்கட்டாயமாக தலையிடுவதை, உடனடியாக நிறுத்த வேண்டும். இது குறித்து, எதிர்க்கட்சிகள், அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.