ADDED : அக் 18, 2025 07:43 AM

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், பெண்களின் ஓட்டுகளைப் பெற, பா.ஜ., சார்பில், வீடுதோறும் துண்டறிக்கை வழங்கி, பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலின்போது, 'அனைத்து மகளிருக்கும், மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்' என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததும், தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டும் எனக்கூறி, 1.15 கோடி பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்குகிறது.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், விடுபட்ட மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க, தி.மு.க., அரசு முடிவு செய்து விண்ணப்பங்களை பெறுகிறது.
பெண்களின் ஓட்டுகளைப் பெறவே, இந்த நடவடிக்கையில் தி.மு.க., இறங்கி உள்ளது.
அதை முறியடித்து, பெண்களின் ஓட்டுகளை பா.ஜ., இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திருப்ப, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது.
இதற்காக, தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் சாராயம் குடித்து ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவங்கள்; 'டாஸ்மாக்' மது விற்பனை; தடையின்றி கிடைக்கும் போதைப்பொருள்; கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகள்; பாலியல் வன்கொடுமை குற்றங்கள்; முன்னாள் அமைச்சர் பொன்முடியின் ஆபாச பேச்சு உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டுள்ளன.
இவற்றை, துண்டறிக்கை வாயிலாக, வீடுதோறும் வழங்கி, பிரசாரம் செய்ய பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர்.
தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளதை சுட்டிக்காட்டி, பா.ஜ.,வுக்கு பெண்கள் ஆதரவை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பின், இந்த பிரசாரம் துவங்கும்.
இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.