மாணவர்களை மத ரீதியான படத்திற்கு அழைத்து சென்ற பாதிரியாரால் சர்ச்சை
மாணவர்களை மத ரீதியான படத்திற்கு அழைத்து சென்ற பாதிரியாரால் சர்ச்சை
ADDED : நவ 23, 2025 01:37 AM

காட்பாடி: கிறிஸ்துவ நிர்வாகம் நடத்தும் தனியார் பள்ளிகள், மாணவர்களை கட்டாயப்படுத்தி, மத ரீதியான படத்தை பார்க்க அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'பேஸ் ஆப் பேஸ்லெஸ்' என்ற, கிறிஸ்துவ கன்னியாஸ்திரி வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டம், காட்பாடியில் இந்த படத்தை பார்ப்பதற்காக, காட்பாடி பகுதியில் உள்ள தனியார் கிறிஸ்துவ பள்ளி, கல்லுாரி மாணவர்களை, அந்தந்த கல்வி நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தி அழைத்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கிடையே, பாதிரியார் ஒருவர் பள்ளி மாணவர்களை காட்பாடி திரையரங்கிற்குள் அழைத்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங் களில் நேற்று பரவி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஹிந்து முன்னணியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் கூறியதாவது:
பள்ளி சிறார்களை பெற்றோர் அனுமதியின்றி, பள்ளி நிர்வாகத்தினர் திரையரங்கிற்கு அழைத்து செல்வது சட்டப்படி தவறு.
மதம் சார்ந்த இந்த படத்தை பார்க்க வேண்டும் என, தமிழக அரசு தெரிவித்துள்ளதா? திராவிட மாடல் ஆட்சியில், மதம் சார்ந்த துறையாக கல்வித்துறை உள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆகியோர், பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

