நெல்லையில் தனியார் பள்ளி திடீர் மூடல் அனுமதியின்றி செயல்பட்டதாக சர்ச்சை
நெல்லையில் தனியார் பள்ளி திடீர் மூடல் அனுமதியின்றி செயல்பட்டதாக சர்ச்சை
ADDED : ஏப் 27, 2025 03:18 AM

திருநெல்வேலி: பிரபல தொழிலதிபரும், அ.தி.மு.க., பிரமுகருமான ஆற்றல் அசோக்குமார் உள்ளிட்ட சிலர் பங்குதாரர்களாக சேர்ந்து, 'தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல்' என்ற பெயரில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் நடத்தி வருகின்றனர்.
இப்பள்ளி மிகவும் பிரபலம். இதில், திருநெல்வேலி நீதிமன்ற வளாகம் அருகே ரஹ்மத் நகரில், 'தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல்' என்ற பள்ளி, 2022ல் துவங்கப்பட்டது.
ஐந்தாம் வகுப்பு வரையிலும் மாணவர் சேர்க்கை நடந்தது. 'பிளஸ் 2 வரை புதிய கட்டடத்தில் பள்ளி இயங்கும்' என, கூறினர். கடந்த, 2022 முதல் மூன்று கல்வி ஆண்டுகளாக பள்ளி செயல்பட்டது.
திடீரென டிசம்பரில் பள்ளி மூடப்படுகிறது எனவும், மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை பெற்றுச் செல்லவும் பள்ளி நிர்வாகம் அறிவித்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்றார்.
அந்த தகவலின் படி, அந்த பள்ளி இயக்குநரகத்தில் பதிவு செய்யப்படவில்லை எனவும், அனுமதியின்றி செயல்பட்டதால் அந்த பள்ளி மீது பெற்றோர் போலீசில் புகார் அளிக்கலாம் எனவும், திருநெல்வேலி மாவட்ட கல்வி அதிகாரி பதிலளித்துள்ளார்.
ஆனால், போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. தற்போது அங்கு பயின்ற, 83 மாணவ -- மாணவியர் வேறு பள்ளிகளில் இடம் தேடி அலைகின்றனர்.
மூன்று ஆண்டுகளாக ஒரு தனியார் பள்ளி அனுமதியின்றி செயல்படுவதை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமலும், விசாரித்து நடவடிக்கை எடுக்காமலும் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, பள்ளி நிர்வாக தரப்பான சிவக்குமார் என்பவரிடம் கேட்டபோது, ''பள்ளிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளோம். ஆனால், தொடர்ந்து நடத்த முடியாத நிலையில், ஏழு மாதங்களுக்கு முன் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டோம்,'' என்றார்.

